Breaking News

பிரபலங்களின் ட்வீட்டுக்கு பின்னால் பாஜக ஐடி விங்!

 விவசாயிகள் போராட்ட விவகாரம்

பிரபலங்களின் ட்வீட்டுக்கு பின்னால் பாஜக ஐடி விங்!

மும்பை, பிப்.16-

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களின் ட்வீட்டுக்கு பின்னால் பாஜக ஐடி செல் உள்ளதாக மகாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா உட்பட சர்வதேச பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து, பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் IndiaTogether, IndiaStands Against propaganda  என்ற ஹாஷ்டேகில் இந்தியாவிற்கு ஆதரவாகவும் ரிஹானா மற்றும் பிற சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே என்று பல பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்வீட் செய்திருந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், விவசாயிகளின் எதிர்ப்பு குறித்த பிரபலங்களின் ட்வீட்டுகளுக்கு எதிரான விசாரணை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த விசாரணையில் பாஜக தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் மற்றும் 12 இன்ஃப்ளூயன்சர்ஸ் பெயர்கள் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளதாக தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று சிகிச்சையில் இருந்து மீண்ட பிறகு, முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய அனில் தேஷ்முக், "ட்வீட் குறித்து பிரபலங்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. எனது அறிக்கை திரித்து கூறப்பட்டுவிட்டது. லதா மங்கேஷ்கர் அவர்கள் நமக்கு கடவுள் போன்றவர். முழு உலகமும் சச்சின் டெண்டுல்கரை மதிக்கிறது.

இவர்களைப் போன்ற பிரபலங்களின் ட்வீட்கள் கட்டாயப்படுத்தி பதிவிடப்பட்டதா என்பது குறித்தும், இதில் பாஜக தொழில்நுட்ப பிரிவின் பங்கு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார். மேலும், "இதுவரை நடந்த விசாரணையில் பாஜக ஐடி விங் தலைவரின் பெயரும், 12 இன்ஃப்ளூயன்சர்ஸ் பெயரும் தெரிய வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக ட்வீட் செய்ய சில பிரபலங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து மகாராஷ்டிரா அரசின் உளவுத்துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



No comments

Thank you for your comments