Breaking News

இலங்கையில் பாஜக கட்சி தொடங்க முடியாது தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு- தேசிய செய்திகள் தொகுப்பு

 இலங்கையில் பாஜக கட்சி தொடங்க முடியாது
 தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.17-

பாஜக இலங்கையில் கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபோல அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா தெரிவித்துள்ளார்.



இலங்கை மற்றும், நேபாளம் நாட்டில், பாஜக கட்சி துவங்க உள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் பில்லப் குமார் தேப் கூறியிருந்தார். அமித் ஷா பாஜக தலைவராக இருந்தபோது, கட்சி தலைவர்களிடம், இப்படி கூறியிருந்தார். அதாவது ஆத்மநிர்பார் தெற்கு ஆசியா என்பது இந்த திட்டத்திற்கு பெயர். இவ்வாறு பில்லப் குமார் தேப் கூறினார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 



இந்நிலையில்தான், இலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா அளித்த பேட்டியில், இந்த தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். "எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது குழுவும் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு கட்சியுடனும் அல்லது குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் இங்கு செயலாற்ற இலங்கை தேர்தல் சட்டங்கள் அனுமதிக்கவில்லை" என்று புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் உறுதியாக தெரிவித்தார்.

திரிபுரா முதல்வர் கருத்தை, ஒரு ஜோக் என்று வர்ணித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவர் நகைச்சுவையாக பேசுவதாக கூறியிருந்தார். ஆனால், அகண்ட பாரதம் என்பது பாஜக அடிப்படை கொள்கையாகும். அதாவது இலங்கை முதல் ஆப்கன் வரையிலான பகுதிதான் அகண்ட பாரதம். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், அடுத்து அண்டை நாடுகளில் ஆட்சியமைக்க அது திட்டமிட்டது.

அமித் ஷா திட்டம் பில்லப் குமார் தேப் மூலம் வெளியே வர, அதற்கு இலங்கை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளதால், இப்போது இது சர்வதேச அளவிலான விவகாரமாக பார்க்கப்படுகிறது.


15 நிமிஷம் கூடுதலாக வேலை பார்த்தாலும் ஓவர்டைம் சம்பளம்! -  மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம்!

புதுடெல்லி, பிப்.17-

அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்தை விட, கூடுதலாக 15 நிமிடங்களுக்கும் மேலாக பணியாற்றினால், அதற்கான ஓவர் டைம் ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

நிறைய அலுவலகங்களில் குறிப்பிட்ட பணி நேரத்தை விடவும் கூடுதலாக தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களது, குடும்ப வாழ்க்கை, உடல் நலம், மன நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்பது தொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புகளில் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில்தான், மத்திய அரசு 2021-22ம் நிதியாண்டில் ஒரு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதம் இறுதியில் சட்ட வரைவு இறுதி வடிவம் பெற்று, வரும் நிதியாண்டு தொடக்கத்திலிருந்து அமல்படுத்தும் வகையில் அது நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக பிரபல முன்னணி ஆங்கில மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய சட்டத்தின்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். காண்ட்ராக்ட் நிறுவனங்கள் மூலமாக ஒரு நிறுவனத்தில் தொழிலாளி பணியமர்த்தப்பட்டு இருந்தாலும், அதை காரணம் காட்டி இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க கூடாது என்று அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லை, காண்ட்ராக்டர் அல்லது மூன்றாவது நபர் மூலமாக பணிக்கு சேர்ந்த தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சட்டத்தின்படி, வேலை நேரத்தை விட கூடுதலாக அரை மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றும் போது ஓவர்டைம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஏற்கனவே அமலில் இருந்தாலும் கூட பெரும்பாலான நிறுவனங்கள் இதை அமல்படுத்தவில்லை.

அப்படி இருக்கும் போது புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்படுவதால் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. இந்த சட்டங்களை சரியாக கண்காணித்து நடைமுறைப்படுத்தினால் மட்டும்தான் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும், என்று தொழிலாளர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.


சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் யூனியன் பிரதேசங்களாகிறதா? - மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, பிப்.17-

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த மஸ்லீஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி லோக்சபாவில் அண்மையில் பேசுகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இது வெறும் தொடக்கம்தான். இனி வரும் காலங்களில் சென்னை, ஹைதராபாத், மும்பை, ஆமதாபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளது என கூறியிருந்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறி வருகின்றன.

லோக்சபாவில் ஒவைஸி கூறிய குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில் அளிப்பதற்கு முன்னதாகவே அவர் அவையை விட்டு வெளியேற்றிவிட்டார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது.

எனவே மேற்கண்ட நகரங்களை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை. எனவே தேவையற்ற கவலை வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்புவதே தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் மஸ்லீஸ் கட்சிக்கும் வேலையாகிவிட்டது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தெலுங்கானா மேலவை தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் நிச்சயம் வெல்லும். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் உண்மையான குணத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். என கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


நாட்டுப்புற கதைகளிலும் வரலாறு உள்ளது-பிரதமர் மோடி

புதுடெல்லி, பிப்.17-

நாட்டை அடிமைப்படுத்தியவர்களால் எழுதப்பட்டது மட்டுமே இந்தியாவின் வரலாறு அல்ல என்றும், தலைமுறை, தலைமுறையாக நாட்டு மக்களிடையே வழங்கி வரும் நாட்டுப்புற கதைகளிலும் நாட்டின் வரலாறு உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்ரைச் மாவட்டத்தில் மகாராஜா சுக்கேல் தேவ் நினைவு சின்னத்திற்கு அடிக்கல் நாட்டியும், சித்தூரா ஏரியை மேம்படுத்தும் திட்டம், மகாராஜா சுக்கேல்தேவ் நினைவு மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்தும் பேசிய அவர், மகாராஜா சுக்கேல் தேவ் போன்றவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை ஒரு போதும் மறக்க முடியாது என்றார்.

நேதாஜி, சர்தார் படேல், அம்பேத்கர் போன்றவர்களுக்கு உரிய மரியாதை முந்தைய ஆட்சியில் வழங்கப்படவில்லை என்றார். அடுத்து வரும் வசந்த காலம் நாட்டுக்கு புதிய நம்பிக்கையை, வளர்ச்சியை கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  


 இந்திய கடற்படையில் மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

மும்பை, பிப்.17-

மும்பைக்கு அருகே உள்ள மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்ட டீசல் மற்றும் மின் மோட்டார்களால் இயங்கும் தாக்குதல் ரக நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 ஐ.என்.எஸ். கரான்ச் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் அடுத்த மாதம் 10 முதல் 15 ஆம் தேதிக்குள் இந்திய கடற்படை பணியை தொடங்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர். 221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்ட அந்த கப்பலில் 8 அதிகாரிகள் உள்பட 43 பேர் பணியாற்ற உள்ளனர். தொடர்ந்து 50 நாட்கள் நீரில் மூழ்கி பயணிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல்,12000 கி.மீட்டர் தூரத்திற்கு இடைநில்லாமல் செல்லும் வல்லமையும் கொண்டது. நீருக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கப்பல் ஒரே நேரத்தில் 18 நீரடி ஏவுகணைகளை ஏவி தாக்கும் திறன் கொண்டது.


தாயகம் திரும்பிய இந்தியர்களில்
5 பேருக்கு உருமாறிய கொரோனா

புதுடெல்லி, பிப்.17-

இங்கிலாந்து கொரோனா போன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாறிய நிலையில், அதிதீவிர தன்மையுடன் பரவிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 4 பேர், அந்நாட்டில் அதிதீவிர தன்மையுடன் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில் பரவும், அதிதீவிர தன்மையுடைய கொரோனா வைரசால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு திரும்பிய நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


புதுச்சேரியில் 

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் ராஜிநாமா

 நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது


புதுச்சேரி, பிப்.17-

புதுச்சேரி காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்ததன் மூலம் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஆனால், அவரது பதவி விலகலால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் நேராது என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் ராஜினாமா கடிதத்தை ஜான்குமார் வழங்கினார்.

நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை 2016-ல் விட்டுக்கொடுத்தவர் ஜான்குமார். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்,

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள், அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், 1 சுயேட்சையின் (மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது.

எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது. நேற்று எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்ததன் மூலம் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும். புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. பெரும்பான்மையை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments

Thank you for your comments