புதுச்சேரி அரசு கலைப்பு ... மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி போராட்டம் அறிவிப்பு...
புதுச்சேரி, பிப்.25-
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை கலைத்த மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
புதுச்சேரி அரசவையில் அடுத்தடுத்து 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக ஆட்சி கலைப்பில் ஈடுபட்ட மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. புதுச்சேரி ஆங்கிலோ பிரென்ச் ஜவுளி வளாகத்தில் போராட்டம் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், பேசுகையில் : சில எம்.எல்.ஏக்களை பணம், அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியும் சிலரை சிபிஐ, வருமான வரி சோதனை குறித்து அச்சுறுத்தியும் பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. இவ்வாறு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததன் மூலம் பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது. பாஜக அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்த்து அண்ணா சிலை அருகே மாபெரும் போராட்டம் நடைபெறும். காங்கிரஸின் கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கும். மேலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments