Breaking News

போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. அரசு எச்சரிக்கை.. 

சென்னை, பிப்.25-

வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால்,  போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறி உள்ளனர். 



ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.



இந்நிலையில், இன்று அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். பணிஓய்வு, வார ஓய்வு, மாற்றுப்பணி ஓய்வுக்கு அனுமதி பெற்றவர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் இன்று கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும். மாற்று ஓய்வு பின்னர் அறிவிக்கப்படும். இன்று விடுப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் விடுப்பு அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. கூறியதாவது:&

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வு தந்திருக்க வேண்டும். 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு தரப்படாதது ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டிலும் அரசு ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்துக் கொண்டு போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 8 ஆயிரம் கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு கால பலன்கள் ஓய்வு பெறும் நாளில் கிடைப்பதில்லை.

இந்த ஆட்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பஸ்கள் உள்ளது. இதில் 15 ஆயிரம் பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. 7 ஆயிரம் பஸ்கள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் பிரச்சனையை அரசுக்கு பலமுறை எடுத்துக்கூறியும் அரசு அதை தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்குத்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். சுமார் 1 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

அண்ணா தொழிற்சங்கம், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இன்றைக்கு வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்களை இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

தொழிற்சங்க விதிப்படி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டுமானால் முறையான நோட்டீஸ் கொடுத்து, கால அவகாச இடைவேளைக்கு பிறகுதான் போராட முடியும். ஆனால் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறாகும். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தமிழ்நாடு முழுவதும் பஸ்களை இயக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments