Breaking News

ஸ்டாலின், உதயநிதி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்!

கள்ளக்குறிச்சி, பிப்.16-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய ஸ்டாலின் மற்றும் உதயநிதி அடுத்தடுத்த வருகையால் தி.மு.க., தொண்டர்கள் உற்சாகம் அடைந்து தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் உதயமானது. அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., வை கட்சி அமைப்பு ரீதியாக வடக்கு, தெற்கு என பிரித்து கட்சித் தலைமை அறிவித்தது. வடக்கு மாவட்டத்தில் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதிகளும், தெற்கு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளும் அடங்கியுள்ளது. வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., வும், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் இல்லை என்றாலும் கட்சி தொண்டர்களை ஒருங்கிணைத்து சோர்ந்து போகாமல் உதயசூரியனும், வசந்தம் கார்த்திகேயனும் வழிநடத்தி வருகின்றனர்.இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தாலும் அவரவர் பகுதியில் கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.குறிப்பாக இளைஞர்களை கட்சியில் கொண்டுவருவதில் வசந்தம் கார்த்திகேயனின் களப்பணி கட்சித் தலைமையின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கட்சித் தலைமை வகுத்துத் தரும் வியூகத்தை கடைபிடித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட பொறுப்பாளர்கள் இருவரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரசாரத்தில் மாவட்டம் முழுவதும் உதயநிதி சுற்று பயணம் செய்தார். அப்போது விவசாயிகள், வியாபாரிகள், சுயஉதவி குழுக்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.இதற்கு ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆதரவளித்தது அக்கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது.இதைத் தொடர்ந்து கடந்த 12 ம் தேதி உளுந்தூர்பேட்டையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் எழுச்சியோடு பேசினார். அதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் தி.மு.க., ஆட்சி வந்ததும் குறைகள் அனைத்தும் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார். அடுத்தடுத்து அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவர் மாவட்டத்தில் பிரசாரம் செய்தது சோர்ந்து கிடந்த கட்சியினர் மத்தியில் புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்து பொதுமக்களை சந்தித்து தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற முனைப்புடன் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பார்த்த அதிமுகவினர் கதிகலங்கிப் போயுள்ளனர். அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலா வருகையால் அதிமுகவினர் ஆடிப்போய் உள்ளனர். செயற்குழு, பொதுக்குழு கூடி கையொப்பம் போட்டு பொதுச்செயலாளர் சசிகலா என்று எழுதி கொடுத்து விட்டு இப்போது வேறுவிதமாக பேசுவதாக அதிமுகவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அமைச்சர்கள் முதல் முதல்வர், துணை முதல்வர் வரையில் பல்வேறு விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இது எப்படி முடியும் என்று தெரியவில்லை. திமுகவினர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அதிமுகவினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றி நடை போடும் தமிழகம் என்று விளம்பரம் செய்கிறது அதிமுக. இதற்கு போட்டியாக நான் ரெடி நீங்க ரெடியா? என்று திமுக விளம்பரம் செய்கிறது. 

விளம்பரங்கள் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் மனதை கவருவோர் யார் என்பதை அறிந்து கொள்ளவே தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தால் ஓட்டுக்களை கவரப் போகிறார்களா, இல்லை வழக்கம்போல பணத்தை வீசி எறிந்து ஓட்டுக்களை கைப்பற்றப் போகிறார்களா என்பதே தேர்தலின் உண்மை நிலையாக மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. எது எப்படியோ ஏதோ ஒரு விதத்தில் மக்களை கவர்ந்தால் மட்டுமே, வாக்காளர்கள் மனது வைத்தால் மட்டுமே ஓட்டுக்களை பெற முடியும் என்பது மட்டும் நிதர்சனம். இந்த முறை திமுகவின் கை சற்று ஓங்கி உள்ளது மட்டும் நிதர்சனம்.

No comments

Thank you for your comments