தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021 முன்னிட்டு மாநில எல்லையோர சோதனை சாவடிகள் பலப்படுத்த ஆலோசனை
ஈரோடு, பிப்.24-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லையோர சோதனை சாவடிகள் பலப்படுத்துவது தொடர்பாக அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் குமிலி வெங்கட அப்பால நாயுடு இவப., (ஆசனூர் வனக்கோட்டம்), கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி ஆகியோர் அலுவலர்களுடனான ஆலோசனை மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளபோது, தமிழ்நாடு கர்நாடக எல்லையோர சோதனை சாவடிகளை பலப்படுத்துவது மற்றும் கூடுதலாக தேவைப்படுகின்ற இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். ஈரோடு மாட்டத்தில் ஏற்கனவே உள்ள ஆசனுலீர் மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவு சோதனை சாவடி, போக்குவரத்துத்துறையின் பண்ணாரி சோதனை சாவடி மற்றும் வனத்துறையின் சோதனை சாவடிகள் காரப்பள்ளம் கேர்மாளம் மற்றும் மகாராஜபுரம் ஆகியவைகளையும், கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளையும் பலப்படுத்தி, தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவது அவசியமாகும். மதுபானங்கள் அனுமதியின்றி கொண்டு செல்வதையும் மேற்படி சோதனை சாவடிகளில் உள்ள காவல் துறை மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும், தமிழக கர்நாடக எல்லையோர வனப்பகுதிகளிலும் மதுபானங்கள் கொண்டு செல்வதும் தேர்தல் நேரங்களில் கர்நாடக/தமிழக பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் விற்பனையினை தீவிரமாக கண்காணித்திட வேண்டுமென அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியானவுடன் சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். இரு மாநிலங்களிலும் மதுபான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்திடவும், மாநில எல்லைகளை இரு மாநில காவல்துறையினர் கூட்டாக ஒருங்கிணைந்து மதுபான குற்றங்களை தடுப்பதற்கு விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள்(பொது) பாலாஜி, ஈஸ்வரன் (கணக்குகள்), மாவட்ட வன அலுவலர் உட்பட துணை காவல் கண்காணிப்பாளர்கள்,பொது மேலாளர் (டாஸ்மாக்), வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments