Breaking News

110விதியின் கீழ்... நடப்பு அதிமுக அரசின் கடைசி அறிவிப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித தனி இடஒதுக்கீடு  

சென்னை :

வன்னியர்களுக்கு அரசு கல்வி நிலையங்களில், வேலைவாய்ப்பில், அரசு பணி நியமனங்களில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும்  சட்ட முன்வடிவு சட்டப் பேரவையில் 26.02.2021 அன்று  மாலை நிறைவேறியது.



சீர் மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் நிறைவேற்றம்.  

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது.  அரசின் பேச்சுவார்த்தையை அடுத்து, 20 சதவிகித இட ஒதுக்கீடு கொள்கையை தளர்த்திக்கொள்வதாக அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஆனால் தற்போது வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பெரும்பகுதி உள் ஒதுக்கீடாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
தனியார் கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவு சட்டப் பேரவையில் 26.02.2021 அன்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) 20% சதவிகித இடஒதுக்கீடு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பெரும்பகுதியாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடும்,

 சீர் மரபினருக்கு 7 சதவிகிதமும்,

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே என்றும், 6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என்ற தகவலையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்து பாமகவினர் கொண்டாடினர்.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 26.02.2021 அன்று  ஆற்றிய உரை விவரம்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

1985ஆம் ஆண்டில் ஜே.ஏ. அம்பா சங்கர் IAS (ஓய்வு) அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த ஆணையம், தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களின் மக்கள் தொகையை மதிப்பிட்டு  தமிழ்நாட்டில் அப்போது இருந்த அனைத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களின் பின்தங்கிய நிலையைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1993ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்கள் மற்றும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 45/1994) கீழ் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்களான கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசின் கீழ் வரும் பணிகளில் பதவிகளும் மற்றும் நியமனங்களிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்காக முறையே 30% மற்றும் 20% இட ஒதுக்கீடு வழங்கி தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர், பிற சாதியினர் மற்றும் சமூகத்தினருடன் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு, அவர்களுக்கு உரிய விகிதாசார ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற இயலவில்லை என்பதால், கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த வன்னியகுல சத்திரியர்களுக்கு தனிப்பட்ட உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக அவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.  பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் சாதிகளுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக மாண்புமிகு அம்மா அவர்கள் 2012 ஆண்டே அரசாணை எண் 35ன்படி அமைக்கப்பட்ட  மாண்புமிகு ஜனார்தனம் அவர்கள் தலைமையிலான ஆணையத்திற்கு அனுப்பி, பரிசீலனை செய்து, உள் ஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அவ்வாணையம் இந்த பொருள் பற்றி பரிசீலனை செய்து, சமர்ப்பித்த அறிக்கை அரசின் பரிசீலனையில் இருந்துவந்த நிலையில்  அந்தப் பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு உரிய சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவர அரசு கருதியது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்கள் சமச்சீரான வளர்ச்சியைப் பெற்று முன்னேற்றுவதற்காகவும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அவர்களுக்கு உரிய விகிதாச்சார வாய்ப்பினை பெறுவதற்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் சில குறிப்பிட்ட ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு 7 சதவீதமும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற ஜாதி பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் ஆகிய மூன்று உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு தற்போது பரிந்துரை செய்துள்ளார்.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான ஆணையத்தின் மேற்கண்ட பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும், அதற்கிணங்க மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவினருக்கிடையே விகிதாச்சார அடிப்படையில் உள் ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் மாண்புமிகு அம்மாவின் அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன உள் ஒதுக்கீட்டு முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது.  2012ம் ஆண்டு ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

     அதோடு இந்த ஒதுக்கீடானது தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இன்னும் 6 மாத காலத்திலே ஜாதிவாரியாக கணக்கெடுப்பதற்காக இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு அந்தப் பணி துவங்கப்பட்டு இருக்கிறது. அது ஒவ்வொரு ஜாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வருகின்ற போது அதனை மாற்றியமைக்கப்படும் என்ற செய்தியையும் இந்த நேரத்திலே  தெரிவித்து, இடஒதுக்கீட்டிற்காக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய டாக்டர் அய்யா அவர்களும் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து தங்களுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார்கள். அதை எல்லாம் கருத்திலே கொண்டு தான் இன்றைக்கு இதை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என்ற செய்தியை சொல்லி, நான் அமைகிறேன். வணக்கம்.
இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 26.02.2021 அன்று  சட்டப்பேரவையில் தெரிவித்தார்.


விவசாயிகள் நகை  கடன் தள்ளுபடி  அறிவிப்பு


கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும், மகளிர் சுய உதவிக் குழுவினர், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 26.02.2021 அன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 6 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுவினர், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 2021-2022 இடைக்கால வரவு செலவு திட்டம்  மீதான விவாதத்தின்போது, விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  26.02.2021 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் 26.02.2021 அன்று அறிக்கை விவரம்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.
இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது. 
இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை.  இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அம்மாவின் அரசு,  கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, சட்டசபையில் 110வது விதியின் கீழ் 26.02.2021 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.











Click here to view pdf file 















No comments

Thank you for your comments