Breaking News

முதல்வர் எடப்பாடியார் நடப்பு ஆட்சியின் கடைசி அறிவிப்பும் ... நிகழ்ச்சியும்... அறிக்கை இணைப்பு...

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம்  தொடக்கம்

சேலம் :

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தொடங்கி வைத்தார்.



நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2 புதிய திட்டப் பணிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக 21 புதிய திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் 5.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு  முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம், மேட்டூரில்  26.2.2021 அன்று காலையில்  நடைபெற்ற அரசு விழாவில்,  மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி, 

மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்தடைந்த நீரை பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.

சேலம் மாவட்டம், மேட்டூர், திப்பம்பட்டியில் 26.2.2021 அன்று நடைபெற்ற மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்  ஆற்றிய உரை:-



சேலம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள விவசாயிகள், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்யைhன, மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையினை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியோடு, உங்களின் ஆசியோடு, இறைவனின் ஆசியோடு இன்றைய தினம் நான் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தச் சிறப்பான நிகழ்ச்சியிலே வாழ்த்துரை வழங்கிய பொதுப்பணித் துறையின்அரசு முதன்மைச் செயலாளர் திரு. கே. மணிவாசகம் அவர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு, குறுகிய காலத்திலும் இந்தத் திட்டத்தை முடிக்க முடியும் என்ற சாதனையை படைத்துள்ளார். அதற்கு என்னுடைய மனமார்ந்த, உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேபோல, இந்தத் திட்டத்திற்கு நிலம் எடுப்பது ஒரு சவாலான காரியமாக இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இத்திட்டம் குறித்து விவசாயிகளிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி, அவர்களிடம் அன்பாக கேட்டுக் கொண்டதற்கிணங்க நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன், மனமுவந்து தங்கள் இடத்தை வழங்கியுள்ளார்கள். நிலம் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும் அதற்காக பாடுபட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த, உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டம் வேகமாக, சிறப்பாக, குறித்த காலத்திற்குள் நடைமுறைப்படுத்திக் காட்டுவோமென்று சிறப்பாக செயல்படுத்திய ஒப்பந்ததாரர் திருவாளர்கள் மெகா இஞ்சினியரிங் நிறுவனத்திற்கும் அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் என் சார்பாகவும், அரசின் சார்பாகவும் மனமார்ந்த, உளமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வறட்சியான பகுதியில், இறைவனின் அருளால் துரிதமாக, மிகச் சிறப்பாக பணிகள் நடைபெற்று, குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15.7.2019 அன்று சட்டமன்றத்திலே பொதுப்பணித்துறையின் மானிய கோரிக்கையில் இந்தத் திட்டத்தை நான் அறிவித்தேன். இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை. இதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 565 கோடி. மேலும், இதற்கான நிலத்தினை கையகப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேகமாக இந்தப் பணிகளை தொடங்கினோம்.

 மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை திப்பம்பட்டியிலுள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் நீரேற்று செய்து, அதன் மூலம் வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலம் 42 ஏரிகளுக்கும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து நங்கவள்ளி வழியாக 31 ஏரிகளுக்கு நீர் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சேர்ந்த  8  ஒன்றியங்களிலுள்ள 40 கிராமங்களில் உள்ள 79 ஏரிகள் மூலம் 4,238 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும், ஏறத்தாழ 38 கிராமங்களுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.  இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஏரிகளுக்குத் தேவைப்படும் மொத்த நீர் 1/2 டி.எம்.சி. வெள்ள உபரி நீர் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து 30 நாட்களுக்கு தினந்தோறும் வினாடிக்கு 214 கன அடி வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் 6.5.2020 அன்று தொடங்கப்பட்டு, முழுவீச்சில் செயல்பட்டு, விவசாய மக்களின் நலன் கருதி மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் பணி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

இன்றைய தினம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2 புதிய திட்டப் பணிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக 21 புதிய திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் 5.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு இன்று என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இருப்பாளை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 450 ஊரக குடியிருப்புகளில் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் வசதிகள். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் எடப்பாடி நகராட்சியில் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பேரூராட்சி துறை சார்பில் முடிவுற்ற 3 பணிகள், ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட ஊராட்சி மையம் சார்பில் முடிவுற்ற 23 பணிகள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் சார்பில் முடிவுற்ற 2 பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில்  முடிவுற்ற 4 பணிகள், கூட்டுறவுத் துறையின் சார்பில் தோரமங்கலம் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு சங்கத்தில் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடம் என மொத்தம் ரூபாய் 62 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 36 முடிவுற்ற பணிகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டம் வேகமாக, சிறப்பாக நடைபெறுவற்கு உறுதுணையாக விளங்கிய முன்னாள் தலைமைச் செயலாளர், தற்போது தமிழகத்தின் ஆலோசகராக இருக்கின்ற மரியாதைக்குரிய க.சண்முகம் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இது விவசாய பெருமக்களுக்கு நலன் பயக்கும் திட்டம் என இந்தத் திட்டம் துவங்கும் போதே அவர் குறிப்பிட்டார். ஆதலால், இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்று நான் அறிவித்தவுடனே வேகமாக, துரிதமாக செயல்பாட்டு இந்தத் திட்டத்திற்கு அடித்தளமாக விளங்கிய முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மாவின் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 50 ஆண்டு காலமாக நிறைவேற்ற முடியாமல், விவசாயப் பெருங்குடி மக்கள் ஏங்கியிருந்த திட்டத்தை நிறைவேற்றி, டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயர் துடைக்க அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தினார்கள். அம்மாவின் அரசும் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி காவேரி நதிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இந்தக் காவேரி நதிநீர் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து எங்கள் அரசு சாதனை புரிந்துள்ளது. வறட்சி, புயல், வெள்ளத்தால் பாதிகப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, 16,43,000 விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை, எண்ணங்களை நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு.

ஐந்தாண்டு காலத்தில் இரண்டு முறை பயிர்கடனை ரத்து செய்து வரலாற்றை படைத்த அரசு அம்மாவின் அரசு. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016 தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டவுடன் விவசாயிகள் பெற்ற பயிர்கடன் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்ததை, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தார்கள். தேர்தல் நேரத்தில் வருகின்ற கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் கட்சியினர் குறிப்பிடுவர். ஆனால், மாண்புமிகு அம்மாவின் அரசு, விவசாயிகள் கோரிக்கை வைத்தவுடன் தேர்தலுக்கு முன்பாகவே அதனை நிறைவேற்றி வரலாற்றைப் படைத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான மும்முனை மின்சாரம், ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 24 மணி நேரமும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

இன்னும் பல்வேறு திட்டங்கள் எங்கள் அரசால் நிறைவேற்றப்படுகின்றன. வறட்சி வந்த போது ஏறத்தாழ 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். இதுவரை தமிழக வரலாற்றில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய சரித்திரம் கிடையாது. அந்தச் சரித்திரத்தையும் அம்மாவின் அரசுதான் செய்துள்ளது.

 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் என பல திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே பயிர்க் காப்பீடு திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 9,257 கோடி ரூபாய் என அதிக இழப்பீட்டைப் பெற்றுத் தந்த அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கம்தான். விவசாயிகள் ஏற்றம் பெறுகிற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறோம்.

அதேபோல், கடைமடைப் பகுதிகளிலும் தூர்வாரி மேட்டூரிலிருந்து தண்ணீர் கடைமடை வரை சரியாகச் சென்று சேர்ந்த காரணத்தால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள், உரங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் அரசாங்கம் வழங்கிய காரணத்தாலும் கடந்த ஆண்டு 32.41 இலட்சம் மெட்ரிக் டன் நெல், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளோம். இதுவரை இவ்வளவு நெல் உற்பத்தி செய்தது கிடையாது. இதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும், 27 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் உற்பத்தி செய்தது கிடையாது.

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றித்தின் சார்பாக ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகளை விவசாயிகள் பங்களிப்போடு தூர்வாரி இத்திட்டத்தை அற்புதமாக நிறைவேற்றிய ஒரே அரசாங்கம் மாண்புமிகு அம்மாவின் அரசாங்கம். இதனால், தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் பொழிந்த மழை நீர் அனைத்து ஏரிகள், குளங்களில் சேமித்து வைக்கப்பட்டு, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான நீர் தங்குதடையில்லாமல் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.

நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமென்று 2019-2020-இல் தேசிய விருதைப் பெற்றுள்ளது. புயல், தொடர் மழை, வறட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எங்கள் அரசு உதவி செய்துள்ளது.

காவேரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற 14,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப் பெரிய திட்டம் விவசாயிகளுக்காக அளித்துள்ளோம். இதுவரை இவ்வளவு பெரிய திட்டம் அறிவிக்கப்பட்டது கிடையாது. இந்தத் திட்டத்தை புதுக்கோட்டையில் நானே நேரடியாகத் தொடங்கி வைத்தேன்.

ரூபாய் 2,639 கோடி மதிப்பீட்டில் கல்லணை கால்வாய் திட்டம், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி உப வடிநிலத் திட்டம், நேற்றைய தினம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 933 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கீழ் பவானி வடிநிலத் திட்டம்,  335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டளை உயர்மட்ட கால்வாய் பாசன திட்டம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுத்துவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, "நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை 10,711 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். இதனால், குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் சுத்தமான நீர் கிடைக்கும். இந்தத் திட்டத்தையும் எங்கள் அரசு நிறைவேற்றி வேளாண் பெருமக்கள் மற்றும் இரவு, பகல் பாராமல் உழைக்கும் வேளாண் தொழிலாளிகளையும் காக்கக்கூடிய அரசு எங்கள் அரசு. நிலம், வீடு இல்லாமல் இருக்கும் வேளாண் தொழிலாளிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் எங்கள் அரசால் கட்டிக் கொடுக்கப்படும்.

அம்மாவின் அரசு உங்கள் அரசு, மக்களுடைய அரசு, மக்கள் நலன் காக்கின்ற அரசு, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு என்று சொல்லி, மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், இரவு, பகல் பாராமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பணியாற்றிய பொதுப்பணித் துறையைச் சேர்ந்த பொறியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையை காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்

[Press Release No : 172 ] Honble Chief Minister inaugurated the completed projects and laid foundation stone for the new projects of several Departments


 பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 

14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை : 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்  நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின்  26.2.2021 அன்று  அறிக்கை விவரம்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர், ராஜன் நகர் கிராமத்தைச் சேர்ந்த  ராஜன் என்பவரின் மகன் செல்வன் புவனேஷ்குமார் பரிசல்துறை என்ற இடத்தில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சத்தியமங்கலம் வட்டம், இக்கரைநெகமம் கிராமத்தைச் சேர்ந்த  ஜெயசந்திரன் என்பவரின் மகன்  லோகேஸ்வரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் வட்டம், காந்தலூர் கிராமத்தில், மலைப்பள்ளம் நீரில் குளிக்கச் சென்ற சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த  ஜாகீர் உசேன் என்பவரின் மகன் தமீம் அன்சாரி,

சிவகுமார் என்பவரின் மகள் செல்வி ஏஞ்சல் ஆகிய 2 பேரும் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த  முருகன் என்பவரின் மனைவி திருமதி ஜெயலட்சுமி என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்   என்ற செய்தியையும்;

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த  வடிவேல் என்பவரின் மகன்  சுப்ரமணியன் என்பவரின் தலையில் மரம் முறிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  என்ற செய்தியையும்;

 கரூர் மாவட்டம், தொண்டமாங்கினம் கிராமத்தைச் சேர்ந்த  பொன்னுசாமி என்பவரின் மகள் சிறுமி சந்தியா என்பவர் கிணற்று படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பள்ளிமடம் கிராமத்தைச் சேர்ந்த  மனோகரன் என்பவரின் மகன்  அழகு என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த  தங்கசாமி என்பவரின் மகன் செல்வன் நித்திஸ் என்பவர் கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில், திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டையைச் சேர்ந்த  பெருமாள் என்பவரின் மகன் செல்வன் கண்ணன் என்பவர் தேங்கியிருந்த நீரில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த  தேவராஜ் என்பவரின் மகன்  சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் என்பவர் மற்றும் ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த  சங்கர் என்பவரின் மகன்  சுரேஷ்குமார் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பெரியமுல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த  கனகசபாபதி என்பவரின் மகன்  வேலு என்பவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மதுரை மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், மாங்குளம் கிராமத்தில், வைக்கோல் சுருட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  சீராளன் என்பவரின் மகன்  நாகப்பன் என்பவர் வைக்கோல்  சுருட்டும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்  என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார.

அறிக்கையை காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்

Tamil Nadu PR [Press Note No : 49 ] Solatium from Chief Ministers Public Relief Fund to the families of the persons who have lost their lives in various incidents in the State


சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம்  அறிவிப்பு

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் 25.2.2021 அன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 19 நபர்கள் காயமடைந்தனர், 5 பேர் இறந்தனர். வெடிவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் நிவாரணம் வழங்க  முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  அவர்களின்  26.2.2021 அன்று அறிக்கை விவரம்:

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில்  25.2.2021 அன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரராஜ் என்பவரின் மனைவி திருமதி செல்வி, செல்லையா என்பவரின் மனைவி திருமதி ஜோதி, ரத்தினசாமி என்பரின் மனைவி திருமதி சந்திரா, அழகர்சாமி என்பவரின் மனைவி திருமதி லட்சுமியம்மாள் மற்றும் பொன்னுசாமி ஆகிய 5 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வெடி விபத்தில் 19 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.


   இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன்,  மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

 இந்த  துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க  நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையை காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்

[Press Note No : 51 ] Solatium from Chief Ministers Public Relief Fund to the families of the persons who have lost their lives and to those injured in the blast in the Fireworks Factory in Virudhunagar District



























No comments

Thank you for your comments