வேலூர் மாநகராட்சியில் அனுமதியை மீறி ஓங்கி நிற்கும் கட்டடங்கள்..! - நடவடிக்கை பாயுமா?
வேலூர், ஜூலை 8-
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரி பகுதியில் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை துளியும் மதிக்காமல் பல அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு வருகின்றன. அனுமதியை மீறி ஓங்கி நிற்கும் கட்டடங்கள் மீது வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்படும் கட்டடங்களில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் கட்ட அனுமதி இல்லை. ஆகவே இரண்டு அடுக்கு மாடி கட்டடம் கட்டப் போவதாக அனுமதி பெற்றுக் கொண்டு நான்கு அடுக்கு வரை கட்டடங்களை கட்டி அவற்றை வியாபார ஸ்தலங்களாக மாற்றி வருகிறார்கள்.
இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது பல தரப்பினரின் குற்றச்சாட்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் சௌத் அவென்யூ ரோடு, பகுதி&-2,ல் வரைபட அனுமதிக்கு மாறுபட்ட நிலையில் கட்டடங்கள் எதிர் எதிரில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடங்களில் ஒன்று திருமண மண்டப பாணியில் அமைக்கும் பணிகள் முடிவுறு தருவாயில் உள்ளது. மற்றொன்றோ அதலபாதாளத்துக்கு பள்ளம் தோண்டி அண்டர் கிரவுண்ட் ஃப்ளோரோடு கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
அதே போல் முருகன் தியேட்டர் காம்ப்ளக்ஸ், அங்கு ஒரு தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கட்டடத்துக்கு பார்க்கிங் வசதி எதுவுமே கிடையாது. ஆனால் அனுமதிக்கப்பட்ட வரையறையைக் கடந்து பல அடுக்கு கட்டியிருக்கிறார்கள். இதனால் மின் இணைப்பு கொடுப்பது கூட சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சத்துவாச்சாரி மெயின் ரோட்டில் அண்டர்கிரவுண்ட் அமைத்து பல அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, (இதற்காக கிணறு அளவுக்கு ஆழம் தோண்டும் போது தண்ணீரே வந்துவிட்டது.) மற்றும் இந்தியன் பாங்க் பக்கத்தில் ஹாலோ பிரிக்ஸ் மூலம் மூன்று அடுக்கு மாடி கட்டப்படுகிறது. அப்படியே மெயின் ரோடு பக்கம் வந்தால் அங்கும் பல அடுக்குமாடி அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்று பகுதி-2, பகுதி-3, பகுதி-4 ஆகிய பகுதி ஏரியாவில் வரைபட அனுமதிக்கு அப்பாற்பட்டு கட்டட அமைப்புகளை அமைத்து வருகிறார்கள். இதற்கு மண்டலம் 2-ல் உள்ள அதிகாரிகள் பலர் குறிப்பாக உதவி ஆணையர் மதிவாணன் உள்ளிட்டவர்கள் சப்போர்ட் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் நுழைவு சாலையின் வலதுபுறம் நான்கு அடுக்கு தளம் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் பெயர் எஸ்.எம்.எஸ். கிராண்ட் ஆகும். அந்த கட்டடத்தில் தங்கும் விடுதி, உணவு விடுதி, வணிக வளாகம் ஆகியவை செயல்படுகிறது. இந்த கட்டடத்திற்கு இரண்டடுக்கு கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மேற்கண்ட எஸ்.எம்.எஸ். உரிமையாளர் 4 மாடி கட்டடமாக அமைத்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து மாநாகராட்சி மண்டலம் 2-ன் சார்பாக கீழ்கண்ட சங்கதிகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1. பார்க்கிங் வசதி கிடையாது. 2.இரண்டு அடுக்கு மாடி கட்ட அனுமதி. 3.குடிநீர் குழாய்க்கு அனுமதியளிக்கவில்லை. 4. ஆழ்துளை கிணறுக்கு அனுமதி கோரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஜெனரேட்டர் வைத்துக் கொள்ளவும் அனுமதி பெறவில்லை. ஆனால் பிரம்மாண்டமான ஜெனரேட்டர் வைத்து இருக்கிறார்கள்.
இங்கு நாம் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் பார்க்கிங் வசதி பற்றி வரைபடத்தில் ஏதும் குறிப்பிடாத நிலையில் அதற்கு முந்தைய உள்ளாட்சி நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது. (அதில் கூட அப்போதைய நிர்வாக அதிகாரியாக இருந்த சண்முகம் என்பவர் தில்லுமுல்லுகளுக்கு உடந்தையாக செயல்பட்டிருக்கிறார்.)
இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாநகராட்சி, மண்டலம் 2-ல் ஆவணங்களைப் பெற்று அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மதிவாணன் போன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே எஸ்.எம்.எஸ்.கிராண்ட் பற்றின புகார் குறித்து விசாரிக்க புகார்தாரர் உயரதிகாரிகள் இது போன்ற சங்கதிகள் சத்துவாச்சாரி பகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் மீறப்பட்டு வரும் நிலையில், இங்கெல்லாம் அமைக்கப்பட்டு வரும் கட்டடங்களுக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற அடுக்கு மாடி வணிக வளாகங்களின் உரிமையாளர்களில் பலர் சொத்து வரியை ஒழுங்காக கட்டுவதே இல்லை. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் தெரிந்தும் கூட மண்டல அதிகாரி மதிவாணன் கண்டும் காணாமல் உள்ளார். என்ன செய்வது கவனிப்பு ரொம்ப முக்கியம் ஆச்சே!


No comments
Thank you for your comments