Breaking News

வேலூர் மாநகராட்சியில் அதிகாரிகள் வேலை செய்யாமல் போலி பில் போட்டு நூதன கொள்ளை!

விரயமாகும் வரிப்பணம்...கொதிக்கும் மக்கள்...

வேலூர், ஜூன் 26-

வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் வேலை செய்யாமலேயே பில் மட்டும் போட்டு பணத்தை சுருட்டுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரமாகும். வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு 15 வார்டுகள் என்று பிரிக்கப்பட்டு 4 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டலங்களில் சொல்லி வைத்தது போன்று அரசு பணத்தை வாரி சுருட்டுவதிலும் என்ன ஒற்றுமையாக செயல்படுகின்றனர். அதாவது பல இடங்களில் போர்வெல்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. 


இதுகுறித்து அந்தந்த பகுதி வாழ் பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் புகார் கொடுத்தாலும், நேரில் சென்று புகார் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லையாம். இதனால் பொறுமையிழக்கும் பொதுமக்களே தாங்களாக முன்வந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு தொகையை வசூல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் வாயிலாகவே போர்வெல்களை பழுது நீக்கி கொள்கின்றனராம். பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்று இந்த வசூல் செய்து பணியை விரைந்து முடித்து விடுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்களாம். இதனால் 4 மண்டலங்களிலும் பணியாற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போர்வெல் பழுது பார்த்தது போன்று கணக்கு காண்பித்து பில் போட்டு தொகையை அபேஸ் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த நூதன மோசடியில் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக இதுபோன்று அதிக சுருட்டல் 2வது மற்றும் 4வது மண்டலத்தில் தான் அதிக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 

இதுபோன்ற புகார்கள் உதவி ஆணையர் போன்றோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படு கின்றனவா என்பது யாருக்கும் தெரியாது. வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் நூதன கொள்ளைக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். குடிநீர் விநியோக நிதி தண்ணீராக செலவு செய்யப்படுகிறது. 60 வார்டுகளில் உள்ள பொதுமக்களை கேட்டால் இது எந்தவகையில் உண்மை, பொய் என்பது தெரியவரும். 

மாநகராட்சி அதிகாரிகள் வைக்கும் பில்களை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் மற்றும் துறை தொடர்பான அதிகாரிகள் என பல்வேறு தரப்பில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டு சேர்ந்துதான் இந்த குடிநீர் விநியோக நிதியை வாரி சுருட்டிக் கொள்கின்றனராம். இதை மாநகராட்சியில் பணியாற்றும் வேறு பிரிவு அதிகாரிகள் தரப்பில் புகாராகவே தெரிவிக்கின்றனர்.

இப்படி வேலூர் மாநகராட்சியில் கூட்டுக் கொள்ளை அநாவசியமாக நடந்து வருகிறது. குடிநீருக்காக மட்டுமே வேலூர் மாநகராட்சி பல லட்சங்கள் நிதியை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது. கீழ் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை கேட்டால் இது மேல்மட்டம் வரையில் மாமூல் சென்று விடுகிறது என்று கூலாக சொல்கின்றனர். 

இப்படி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் மாபாதகர்களை எப்படி தண்டிப்பது என்றே தெரியவில்லை. போலி பில் போட்டு பணத்தை சுருட்டி பங்கு பிரித்து கொள்வதை ஒரு கும்பல் வழக்கமாக கொண்டுள்ளது. இவர்கள் என்றைக்கு கையும் களவுமாக சிக்குவார்கள் என்பதுதான் தெரியவில்லை. இப்படி வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சொல்லி வைத்தார்போன்று கூட்டுக் கொள்ளையில் அதிகாரிகள் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். ஃபிட்டர், லைன்மேன் என்று தண்ணீர் விநியோகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு ஒரு சிறு தொகை மட்டும் கண்ணில் காட்டப்படுகிறதாம். பெரியதொகை அதிகாரிகள் மட்டத்தில் சுவாஹா விடப்படுகிறதாம். இத்துடன் விட்டு விடுவதில்லை, போர்வெல்லில் பொறுத்தியுள்ள மோட்டர் பழுதாகிவிட்டால் காயில் கட்டுவதாக சொல்லி அதில் ஒரு தொகை ஆட்டையை போடுகின்றனர் கல் நெஞ்சம் படைத்த சில அதிகாரிகள்.

லஞ்சத்தில் கொழித்து விட்டனர் இந்த வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுபோன்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வேலூர் மாநகராட்சி ஆணையர்  சங்கரனுக்கு தெரியுமா? தெரியாதா?. இதற்கு அடுத்தார்போன்று பிளீச்சிங் பவுடர் 60 வார்டுகளுக்கும் தெளித்தது, கிருமி நாசினி (லைசால்) தெளித்தது என்று பில் போட்டு சுருட்டப்படுகிறது. பேரிடர் காலம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் சிலர், செய்யும் தவறுகள் வெளியில் தெரியவா போகிறது என்று அலட்சியமாக செயல்படுகின்றனர். உயரதிகாரிகள் இதுபோன்ற பகல் கொள்ளையடிக்கும் பில்களை நன்கு ஆராய்ந்து அந்த கடையில் பொருட்கள் வாங்கப்பட்டதா அது உண்மையா? என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் பணம் கொள்ளை போவதை யாலும் தடுக்க முடியாது. 

அரசு என்னதான் திட்டம் போட்டாலும் செயல்படுத்தும் அதிகாரிகள் சிலர் இதுபோன்று இருந்தால் எந்த அரசால்தான் என்னதான் செய்ய முடியும். குறிப்பாக வேலூர் மாநகராட்சி எல்லைகளில் உள்ள வார்டுகள் என்னமோ தனித்து விடப்பட்டது போன்று யாரும் திரும்பி கூட பார்ப்பது இல்லை. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சுழன்று பணியாற்றுகின்றனர் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள். இப்படி மாநகராட்சி நிதியில் இருந்து செய்யாத பணிக்கு பில் மட்டும் போட்டு வாரி சுருட்டுவது முடிவுக்கு வருவது எப்போது?. மக்கள் வரிப்பணம் விரயம் ஆவது தடுக்கப்படுவது எப்போது? என்பதற்கு மட்டும் இதுநாள் வரையில் விடை தெரியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள மாநகராட்சி ஆணையர் சங்கரன் மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுத்து நிறுத்துவாரா? இல்லை நமக்கேன் வம்பு என்று கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



No comments

Thank you for your comments