காட்பாடியில் அரசு அலுவலர்களை மிரட்டி பணம் பறிக்கும் அத்துமீறிய செயல்..!
வேலூர், ஜூன் 19-
காட்பாடி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் டுபாக்கூர் செய்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை போலி செய்தியாளர்களை களை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டம் என்றாலே போலி செய்தியாளர்கள் அதிகம் நடமாடும் பகுதி என்று சொல்லுவதுண்டு. இந்நிலையில் தற்போது கொரோனா பரவி வரும் வேளையில் செய்தியாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அரசு அலுவலர்களை குறிவைத்து பணம் பறிக்கும் வேலையில் டுபாக்கூர் செய்தியாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதித்ததாக கூறி அரசு அலுவலர்கள் முதல் பாமரன் வரை கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு சிலர் தங்களை செய்தியாளர்கள் என்று கூறி கொண்டு அரசு அலுவலகங்களில் கையேந்த தொடங்கி விட்டனர். இதனால் உண்மையான செய்தியாளர்களுக்கு அவமானம்தான் மிச்சம்...
காட்பாடி பகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி காட்பாடி முதலாவது மண்டல அலுவலகம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம், காட்பாடி பதிவாளர் அலுவலகம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள மோட்டார் வாகன சோதனைச் சாவடி ஆகிய பகுதிகள்தான் இவர்களது இலக்காக உள்ளது. டுபாக்கூர் செய்தியாளர்கள் ஜோடி ஜோடியாகவும், தனியாகவும் இந்த அலுவலகங்களுக்கு 10ம் தேதி தவறாமல் ஆஜராகி விடுகின்றனர். நாங்கள் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டதால் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதனால் எங்கள் வருமானம் பாதித்து விட்டது என்று கூறி அரசு அலுவலர்களின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி பணம் கேட்கின்றனர். குறைந்தபட்சம் ரூ.200 முதல் ரூ.300, அதிகபட்சம் ரூ.500 இவர்களது இலக்கு என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற தவாறான போலி செய்தியாளர்களை பார்த்தாலே போதும் அரசு அலுவலர்கள் முகம் சுளிக்கச் செய்கின்றனர். டுபாக்கூர் செய்தியாளர்களுடன் தற்போது பல முன்னணி பத்திரிகையின் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களும் கைகோர்த்து செயல்படுகின்றனர்.
பல டுபாக்கூர்கள் வாரந்தோறும் இதே அலுவலகங்களில் வட்டமடித்தபடி உள்ளனர். இவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த அதிகாரிகளை நேரடியாக மிரட்ட ஆரம்பித்து விட்டனர் அந்த தகாத போலி செய்தியாளர்கள். எங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்து கவனிக்காமல் விட்டு விட்டால் உங்களை புகைப்படம் எடுத்து என்ன வேண்டுமானாலும், ஏன் தாறுமாறாக செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். தற்போது செய்தி சேகரிக்க எங்கும் செல்வது இல்லை. இதுபோன்ற அரசு அலுவலகங்களை குறி வைத்து காய் நகர்த்த தொடங்கி விட்டனர் டுபாக்கூர்கள்.
எந்த அலுவலகமாக இருந்தாலும் சரி, என்ன நாங்கள் வந்துள்ளோம் கவனிப்பே கிடையாதா என்று கேட்கின்றனர். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது வேலையை கனகச்சிதமாக செய்கின்றனர். நீங்கள் லஞ்சம் வாங்குவதாகவும், தவறான செயலில் ஈடுபடுவதாகவும் போலியாகவே செய்திகள் வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுக்கும் நிலைக்கு வேலூர் மாவட்ட டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் மாறி விட்டனர்.
இதுபோன்ற டுபாக்கூர்கள் யார் என்பது அந்தந்த அலுவலகங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு காண்பிக்கும். செய்தியாளர் வேலையே செய்வது இல்லை. செய்வது வேறு வேலை. ஆனால் மாமூல் வாங்க மட்டும் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர். அதே போன்று எங்கு இனாம் தருகின்றனரோ அங்கு முதலில் தொடையை தட்டிக் கொண்டு சென்று நின்று விடுகின்றனர் இதுபோன்ற டுபாக்கூர்கள்.
பத்திரிகைகளில் எதுவும் இவர்களால் செய்ய முடியாது. மாறாக வாட்ஸ் அப்பில் தன்னை ரிப்போர்ட்டர் என்று போட்டுக் கொள்வதில் புலகாங்கிதம் அடைகின்றனர். அவர் என்ன பத்திரிகையில் உள்ளார். அவர் வெளியிட்ட செய்திதான் என்ன என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. இவர்கள்தான் டுபாக்கூர் செய்தியாளர்கள்.
இது போன்ற தகாத போலி செய்தியாளர்களால் செய்திதுறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றும் பரவும் சூழலிலும், தன்னுயிர் பாராமல் உண்மையான செய்தியாளர்கள் பலர் பணி செய்து கிடப்பதே வேலை என்று இரவு பகல் பாராமல் பணியாற்றினார்கள். கொரோனா தொற்றுக்கு ஆளாகினார்கள் என்றால் மிகையாகது.
இன்று அரசு அலுவலர்களையும், அதிகாரிகளையும் மிரட்டும் அளவுக்கு போலி செய்தியாளர்கள் பெருகிவிட்டனர்.இவர்களுக்கு எத்துணை தைரியம் வந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் ஆண்டுதோறும் உண்மையான உழைக்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே பிரஸ் ஸ்டிக்கர், பஸ் பாஸ், அரசு அடையாள அட்டை போன்றவற்றை பெற்றுத் தர வேண்டும். போலி செய்தியாளர்களை களை எடுக்கவேண்டும்
ஆனால் அந்த தலையாய பணியை மட்டும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்வதே கிடையாது. இது மாவட்ட ஆட்சியருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதனால்தான் டுபாக்கூர்கள் தைரியமாக வேலூர் மாவட்டத்தில் வலம் வர முடிகிறது. இந்த ஆண்டாவது செய்தியாளர்களை அங்கீகரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். உண்மை செய்தியாளர்களை சற்று திரும்பி பாருங்கள் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உண்மையான செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் இப்படித்தான் நிலைமை விபரீதமாக போகும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

No comments
Thank you for your comments