Breaking News

காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் வசூல் வேட்டை அமோகம்!

வேலூர்,  மார்ச் 24, 2020:

காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் வசூல் வேட்டை அமோகமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் ஒருபுறம் பரவி வரும் வேளையில் வசூல் வேட்டை மட்டும் குறையாமல் பார்த்து கொள்கின்றனர்.

காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி மெட்டுக்குளம் அருகே செயல்படுகிறது. இந்த சோதனைச் சாவடியானது தங்கச்சுரங்கம் போன்றது என்றே சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த சோதனைச் சாவடியில் பணியாற்ற மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அத்துடன் இந்த சோதனைச் சாவடிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத வெளிநபர்களும் வேலை செய்கின்றனர். அதாவது லாரி ஓட்டுநர்களை அழைத்து வந்து வசூல் வேட்டை நடத்துவதில் பலே கில்லாடிகளாக உள்ளனர். இவர்கள் யார் என்றே தெரியாமல் இவர்களுக்கு பயந்து நடுங்க வேண்டிய நிலை இந்த சோதனைச் சாவடியில் நிலவுகிறது. இதுபோன்ற ஆட்களை வைத்து வேலை வாங்க மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அளவில்லா அதிகாரம் வழங்கியது யார்...? இதுபோன்ற விவரங்கள் துணை போக்குவரத்து ஆணையருக்கு தெரியுமா...? தெரியாதா...? ஏனென்றால் இந்த துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் இதற்கு முன்னர் இந்த வேலூர் மண்ணில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றியவர் ஆவார். 

இதனால் இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகள் காட்பாடி மெட்டுக்குளம் சோதனைச் சாவடியில் நடப்பது தெரிந்தும் தெரியாமல் கண்டும் காணாமல் விட்டு விட்டார்களா? என்பதே விடை தெரியாத கேள்வியாக உள்ளது. வனத்துறை சோதனை சாவடி அருகில் புதிய சோதனைச் சாவடி கட்டடம் கட்டி முடித்தும் அங்கு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவில்லை.

வேலூர் மாவட்டத்தில் மெட்டுக்குளம் சோதனைச் சாவடியில்தான் பணமழை பொழிகிறது. இதனால் இதுபோன்ற திரைமறைவு வேலைகள் வெளியில் தெரியாமல் இருக்கவே எத்தனை செய்தியாளர்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டு ஒரு நோட்டு போட்டு அந்த செய்தியாளர், புகைப்பட கலைஞர், தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் பெயர், அவர் பணியாற்றும் செய்தி நிறுவனத்தின் பெயர், அவரது அலைபேசி எண், அவரது கையொப்பம் போன்றவற்றை பிரதி மாதம் 10ம் தேதி பெற்றுக் கொண்டு தொலைக்காட்சி என்றால் தலா ரூ.ஆயிரம், சில முன்னணி நாளிதழ்கள் என்றால் மட்டும் ரூ.ஆயிரம், மற்ற நாளிதழ்கள், மாதமிருறை இதழ்கள், வார, மாத இதழ்கள் என்று அனைத்துக்கும் தலா ரூ.500 என்று வாரியிறைக்கின்றனர். இப்படி அரசு பணத்தை வாரியிறைக்க முடியுமா?. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு?. ஆற்றில் வருகிறது, மணலில் சொருகுகிறது என்று சொல்வார்கள். இதைவிட எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஆற்று நீரை அள்ளி பருகினால் குறைந்துவிடவா போகிறது என்பார்கள். 

அதுபோன்று வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர் என்று சொன்னாலே போதும் பயந்து கொண்டு பணத்தை எடுத்து கொடுத்து விடுகின்றனர். அத்துடன் இந்த செய்தியாளர்கள் பட்டியல் (மாமூல் பெற்றுக் கொள்ளும் விவரம்) வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் துணை போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆகியோருக்கு செல்வதாக புதிய புருடா விடுகின்றனர் இங்குள்ள பிரகஸ்பதிகள்.

இப்படி செய்தியாளர்களையே ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனர். இதுபோன்ற காரணத்தினாலேயே போலி செய்தியாளர்கள் உருவாகின்றனர்... என்றால் மிகையாகாது. அத்துடன் ஓய்ந்து போகவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் செய்தியாளர்கள் பல்வேறு தேவைகளுக்காக பணம் வேண்டும் என்றால் இந்த சோதனைச் சாவடியை நாடி வந்து பணம் பெற்றுச் செல்கின்றனர். அப்படியென்றால் இங்கு எப்படி வசூல் மழையில் நனைகின்றனர் என்று சொல்லவா வேண்டும். வேலூர் மாவட்டம் இல்லாது பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து கூட பல செய்தியாளர்கள் சனிக்கிழமைகளில் வந்து வசூல் வேட்டை நடத்தி செல்கின்றனர். இவர்கள் ஏன் இப்படி கப்பம் கட்டி பிழைப்பு நடத்துகின்றனர். இவர்கள் அப்படி என்ன தவறு செய்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா? இவர்களது தில்லாலங்கடி வேலைகள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்று இதுபோன்ற மாமூல் மழை பொழிகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கூட இந்த செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்கும் பட்டியல் செல்கிறது என்று இந்த சோதனைச் சாவடியில் பணியாற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாய்கூசாமல் பொய் சொல்கின்றனர். செய்தியாளர்களுக்கு கையூட்டு கொடுத்து விட்டு இவர்கள் விருப்பம்போன்று களத்தில் புகுந்து லாரி ஓட்டுநர்களையும், லாரி உரிமையாளர்களையும் மிரட்டி கேட்கும் தொகையை கறாராக அவர்களது கழுத்தில் துண்டை போட்டு வசூல் செய்து விடுகின்றனர்.

இதுபோன்ற தவறுகளை செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர், துணை போக்குவரத்து ஆணையர் போன்றோர் ஏன் துணை போகின்றனர். அவர்களுக்கு இவர்கள் பின்புலமாக செயல்படுகின்றார்களா? இவர்களது அன்றாட நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும். 

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த அலுவலகத்தின் மீது ஒரு கண் வைக்க வேண்டும். இதையும் மீறி செய்தி வெளியிட்டால் ஒரு நாள் செய்திதானே போடட்டும் என்று அலட்சியம் காண்பிக்கின்றனர். அரசும் நம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று எக்காளமிடுகின்றனர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள். இவர்களது வீடுகள், இவர்களது உறவினர் இல்லங்களில் சோதனை நடத்தட்டும் பின்னர் பாருங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எத்தனை பேர் கம்பி எண்ணுகின்றனர் என்று தெரிந்து விடும். இவர்களை பொறுத்த வரையில் எந்த செய்தியாளரும் நம்மை பற்றி செய்தி வெளியிடமாட்டார்கள். ஏனென்றால் நாம்தான் அவர்களுக்கு வாய்முட்டு (மாமூல் போட்டு விட்டோமே) அதாவது நாய்க்கு எலும்பு துண்டு போட்டு விட்ட பிறகு நாய் கவ்விக் கொண்டு சென்று விடும் என்று எண்ணுகின்றனர். 

இவர்களது தில்லாலங்கடி வேலைகளை தோலுரித்து காட்டுவதே செய்தியாளரின் தலையாய கடமையாகும். லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று சொல்வதை இவர்களது காதுகளுக்கு எட்டவில்லை போலும். கம்பி எண்ணும்போதாவது நினைத்து பார்ப்பார்களா? களைகளை களைய புதிய அவதாரம் எடுக்கப் போவது யார்?. விரைவில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அரசு அனுமதியின்றி பணியாற்றும் பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

மாதந்தோறும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் லஞ்சத்தை (மாமூல்) அடியோடு நிறுத்தப்பட வேண்டும். கொரோனா விரைவாக பரவி வரும் நிலையில் கூட லஞ்சம் வசூல் செய்வது நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிழைப்பு நடத்துவதற்கு வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் இவர்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

அதுமட்டுமின்றி, தமிழக அரசு எங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.  எனவே கேஸ் எழுதவேண்டும் என்றும் பாதி தொகையை அபாராதமாகவும், பாதி அவர்களது கணக்கிற்காகவும் கணக்குபோட்டு கச்சிதமாக கல்லா கட்டுகின்றனர்.  இதில் வசூலாகும் தொகையை நாங்கள் பாதியும், மீதியை அரசுக்கும் உடனுக்குடன் வழங்கி விடுகிறோம் என்று தைரியமாக கூறுகின்றனர். இப்படி அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபத்தானவர்கள் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என்ற பெயரில் பணியாற்றி வருகின்றனர்.

நாங்கள் வசூலிக்கும் பணம் பாதி எங்களுக்கும், மீதி உயர் அதிகாரிகளுக்கும் நாங்கள் அனுப்புகிறோம் என்று கூறி கொக்கரிக்கின்றனர். நாங்கள் ஒழுங்காக மாதா மாதம் மாமூல் செலுத்தி வருகிறோம். நிலைமை அந்தளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர், தமிழக முதல்வர், போக்குவரத்து துறை ஆணையர் என்று யாருக்கும் இவர்கள் அஞ்சுவது இல்லை. யாரை எப்படி பேசி சமாளிப்பது என்ற வித்தையை நாங்கள் கற்று வைத்துள்ளோம் என்றும், போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று நா கூசாமல் சொல்கின்றனர். அப்படி என்றால் பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்வதுண்டு, அதை நாங்கள் கேட்டதுண்டு. இப்போது அது நடைமுறைக்கு வந்து விட்டது போலும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும் பேராபத்து விரைவில் ஏற்படும். அதற்கு முன்னர் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் களைகளை களைந்து எடுக்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்தமுறையாவது முன்வருவாரா? என்று சமூக ஆர்வலர்கள் ஆர்வலமுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

நியாயம், நேர்மை, தருமம் மறைந்து விட்டது. அடுத்தவரை சுரண்டி பிழைப்பு நடத்த ஆயத்தமாகி விட்டனர் போக்குவரத்து துறையினர். கேட்டால் அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில் இதுபோன்ற களைகள் அதிகரித்து நாட்டையே அழித்து விடும். நமக்கென்ன என்று அமைதி காப்பதை விட்டு விட்டு கடும் நடவடிக்கையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

No comments

Thank you for your comments