Breaking News

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து! - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 7-
கடந்த ஆண்டு இறுதியில் சென்னையை மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும் என கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தின் புவி அமைப்பியல் துறை
ஆகியவை இணைந்து, சென்னையில் பெய்த பெருமழை குறித்த விஞ்ஞானிகளின் கருத்தரங்கை நடத்தின.

கருத்தரங்கில் விஞ்ஞானிகள் பேசும்போது, ”எல் - நினோ எனப்படும், பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால், ஒரு குறிப்பிட்ட பகுதியில், எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்யும்; புவி வெப்பமயமாதலால் வறட்சியும் நிலவும்.

சென்னையில் பெய்த பெருமழைக்கு எல் - நினோ உட்பட பல காரணங்கள் உள்ளன. வங்கக் கடலின் மேற்கில், சென்னையை ஒட்டியுள்ள கடலோரம் மற்றும் தரைப்பகுதி அதிக வெப்பமயமாகிறது; இதுவும், அதிக மழை பெய்ய காரணம்.
சமீபத்தில் பெய்த பெருமழை போன்று வரும் காலங்களிலும், சென்னைக்கு மழை உண்டு; அது எப்போது எனக் கணிக்க முடியாது. எனவே, முன்னேற்பாடு அவசியம். தற்போதைய நிலையில், தமிழகத்தில் சராசரி மழை அளவு குறைந்துள்ளது; தென் மேற்குப் பருவ மழையின் அளவு குறைந்து, வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகரித்துள்ளது. நீரைச் சேமிக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

விஞ்ஞானிகள் குழு தேவை:
கருத்தரங்கில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் ராஜாமணி பேசியபோது, ”சென்னையில் 2015 நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட பெரு மழை, எதிர்பாராத சம்பவமல்ல. வானிலை ஆய்வு மையத்தினர் தெளிவாக முன் அறிவிப்பு விடுத்தனர்; ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

நம் அரசுகள் நகர்ப்புறத்தைக் கட்டமைப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. அனைத்து விவசாய நிலங்களும் கட்டடங்களாகி விட்டன. குளம், ஏரி போன்ற நீராதாரங்களைப் பாதுகாக்கவில்லை. நீரைச் சேமிக்க வழியின்றி, நகருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து, கடலில் சென்று கலந்துவிட்டது.

எதிர்காலத்தில், இந்த பிரச்சனையை சமாளிக்க சுதந்திரமான விஞ்ஞானிகள் குழுவை, அரசுத் துறைகளுக்கு உதவ அமைக்க வேண்டும். அதில் விஞ்ஞானிகள், நிபுணர்கள், பேராசிரியர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் இயற்கை பேரிடர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

No comments

Thank you for your comments