கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம்: நடிகர் உள்ளிட்ட சிலரிடம் போலீஸார் விசாரணை
கேரளா, மார்ச் 7-
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவ்ர் கலாபவன் மணி. தமிழில்
ஜெமினி படத்தின் மூல அறிமுகம் ஆன இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, சனிக்கிழமையன்று
சுய நினைவு அற்ற நிலையில் அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட அவர்
கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச்
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கலாபவன் மணி உடலில் மெத்தனால்
என்ற நச்சுப் பொருள் கலந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கலாபவன் மணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகம் உள்ளது என கூறினார். இந்த புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.
இந்த தனிப்படை நேற்று இரவு கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் விசாரணையை தொடங்கியது. மேலும் நேற்று அந்த இல்லத்தில் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட 5 நபர்களை போலீஸார் விசாரித்தனர்.
இந்நிலையில் கலாபவன் மணி உடலில் மெத்தனால் கலந்திருந்தது என்ற புகாரை அடுத்து உடற்கூறு சோதனைக்காக அவரது உடல் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று உடற்கூறு சோதனை நடைபெற்றது. இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.
No comments
Thank you for your comments