சாதி மாறி திருமணம் செய்ததற்காக கொல்லப்பட்ட சங்கரின் மனைவி நீதிமன்றத்தில் வாக்குமூலம்
திருப்பூர், மார்ச் 21-
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாற்று சாதியில் காதல் திருமணம் செய்த 22 வயதான சங்கரை நடுரோட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்தனர்.
அவரது மனைவி கவுசல்யா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பொலிசார், தனிப்படை அமைத்து அந்த கொலைக்காரர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்தனர்.
இதையடுத்து நடந்த பொலிஸ் விசாரணையில், அவர்கள் பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகதீசன் (31), மைக்கேல் என்கிற மதன் (24), செல்வக்குமார் (25), மணிகண்டன் (39) என்பது தெரியவந்தது.
இவர்கள் கவுசல்யாவின் உறவினர்கள் என்பதும், கவுசல்யாவின் தந்தை சொல்லியே இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி அவமானத்தில் இருந்தார்.
ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட அவமானத்தில் ஆத்திரமடைந்து இவர்களை கொல்ல வேண்டும் என எங்களிடம் கூறினார்.
அதன் அடிப்படையிலே இந்த கொலையை நாங்கள் செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதில், கவுசல்யாவின் உறவினர்கள் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் அந்த வாக்குமூலத்தில் கூறினர்.
இந்நிலையில், சங்கரின் மனைவி கவுசல்யா பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இவ்வழக்கில் நேரடி சாட்சியான கவுசல்யா வாக்குமூலம் அளிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து அவசர ஊர்தி மூலம் பல்லடம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பல்லடம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன் கவுசல்யா தவிர 5 பேர் சாட்சியம் அளிப்பதாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பல்லடம் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்துள்ளது.
No comments
Thank you for your comments