ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி: மக்கள் ஜனநாயக கட்சியின் சட்டப்பேரவை தலைவராக மெகபூபா தேர்வு
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் 7–ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் சயீத்தின் மகளும், பாராளுமன்ற எம்.பி.யுமான மெகபூபா தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த அரசு அமையவில்லை.
மெகபூபா, காஷ்மீருக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்ததே, இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனால் மீண்டும் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி வந்த மெகபூபா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மெகபூபா கூறினார். மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, மெகபூபா முப்தி இன்று ஜம்முவில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் சட்டப்பேரவை தலைவராக மெகபூபா முப்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, மீண்டும் பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
ஆட்சியமைப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி மெகபூபா மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் சாத் சர்மா ஆகியோருக்கு கவர்னர் வோரா கடிதம் எழுதியுள்ள நிலையில், சட்டமன்றக் கட்சி தலைவராக மெகபூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி பிடிபி தலைவர்கள் கேட்க உள்ளனர். இதேபோல் பா.ஜ.க. தரப்பிலும் நாளை ஆதரவு கடிதம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மெகபூபாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார்.
No comments
Thank you for your comments