பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது 60 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
புதுடெல்லி, மார்ச் 24-
மக்களிடம் இருந்து வரும் அனைத்து புகார்களும் 60 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் குறைகளைத் தீர்க்க, "துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்' (பிரகதி) எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்திலான புதிய நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் நான்காவது புதன்கிழமைகளில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் மத்திய அரசு செயலர்கள், மாநில தலைமைச் செயலர்களுடன் கலந்துரையாடுவார்.
இந்நிலையில், நேற்று பிரகதி தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அப்போது, மக்களிடம் இருந்து வரும் புகார்கள் அனைத்தும், பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், அதிகமாக புகார்கள் குவிந்து வருவதால், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறும் மோடி கேட்டுக் கொண்டார்.
No comments
Thank you for your comments