மக்கள் நலக் கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த் வர வேண்டும்: திருமாவளவனும் அழைப்பு
செங்கல்பட்டு, மார்ச் 21-
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக
அறிவித்தார். இருப்பினும் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்
கூட்டணி குறித்து பேச வரலாம் என அவரது மனைவி பிரேமலதா தெரிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து பாஜக
பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதாவுக்கும் பாஜகவுடன்
சேரவே விருப்பம் இருப்பதாக கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை தங்கள்
கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள். அதிலும்
குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விஜயகாந்துக்கு பலமுறை அழைப்பு
விடுத்துள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் திமுக-காங்கிரஸ் கூட்டணி வர
விரும்பினால் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை
சமூகமாக நடந்தது. இந்த கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த் வர வேண்டும்
என்று விரும்புகிறோம். கூட்டணிக்கு வருமாறு அவரை நேரில் சந்தித்து விடுத்த
அழைப்பு இன்னும் அப்படியே தான் உள்ளது. அவர் நல்ல முடிவுக்கு வர வேண்டும்
என வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.
No comments
Thank you for your comments