Breaking News

மேடம் துஸாட்ஸ் மியூசியத்தில் விரைவில் "மிஸ்டர் மோடி"

டெல்லி, மார்ச் 18-
பிரபல மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் இந்தியப் பிரதமர் மோடியின் சிலையும் இடம் பிடிக்கப் போகிறது.

லண்டனில் கடந்த 1836ம் ஆண்டு திறக்கப்பட்ட மெழுகுச் சிலை அருங்காட்சியம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில்
உள்ளது. இதில், பிரபலங்கள் பலரின் மெழுகுச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது இந்தியப் பிரதமரான  நரேந்திர மோடியின் சிலையும்
அந்த அருங்காட்சியத்தில் இடம் பிடிக்கப்போகிறது.

இதற்காக அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மெழுகுச் சிலை வடிவமைப்பாளர்கள்  குழு சமீபத்தில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். அப்போது மோடியின் உடல் அளவுகள், முடியின் நிறம் உள்ளிட்டவை குறித்துக் கொள்ளப்பட்டன.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மோடியின் முகம், கை, கண், முடி என தனித்தனியே அளவு எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மெழுகுச் சிலைக்கு மோடியின் பேவரைட் உடையான க்ரீம் கலர் குர்தா, ஜாக்கெட்டோடு அணிவிக்க இருக்கிறார்களாம். அதோடு ‘நமஸ்தே’ அதாவது வணக்கம் சொல்லும் போஸில் மோடியின் சிலை உருவாக்கப்பட இருக்கிறதாம் இந்த மெழுகுச் சிலையானது லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் பாங்காங் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்திற்கு மூன்றிற்கும் மேற்பட்ட முறை சென்று வந்துள்ளாராம் மோடி. அப்போதெல்லாம் மற்ற மெழுகுச் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது அவரது வழக்கமாம். தற்போது தனது மெழுகுச் சிலையும் அங்கே இடம் பெறப் போவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி  போன்ற மறைந்த தலைவர்களின் மெழுகுச் சிலைகளும், அமிதாப்பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கரீனா  கபூர், மாதுரி தீட்சித்  மற்றும் கிரிக்கெட் கடவுள் சச்சின் ஆகியோரது  மெழுகுச் சிலைகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments