கேப்டன் விஜயகாந்த் அணி" என்ற பெயரை பயன்படுத்த தயங்கும் மநகூ தலைவர்கள்
திருச்சியில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாட்டில் பெயருக்கு கூட தேமுதிகவின் பெயர் இடம் பெறவில்லை. போஸ்டரில் வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், விஜயகாந்த் ஆகிய ஐவர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் கேப்டன் விஜயகாந்த் அணி என்று கூறுவதில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே முரண்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி பெமினா ஹோட்டலில் இன்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநாடு தொடங்கியது. திருச்சியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் தேமுதிக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கின்றன. கடந்த 23ம் தேதி கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்த உடனேயே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்றே அழைக்கப்படும் என்று கூறினார்.
இதற்கு இடதுசாரிகள் ஆதரவளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மக்கள் நல கூட்டணிக்கு எத்தனை தலைவர்கள் வந்து சேர்ந்தாலும், இந்த கூட்டணி, மக்கள் நல கூட்டணி என்றே அழைக்கப்படும். எக்காரணம் கொண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றார்.
இதேபோல மக்கள் நலக்கூட்டணியில் உள்ள தலைவர்களே விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படுவது பற்றிய வைகோவின் பேச்சுக்கு முரண்பட்டனர். ஆனால் தேமுதிகவின் பிரேமலதா மட்டுமே தன்னுடைய பேச்சின் போது கேப்டன் விஜயகாந்த் அணி என்று கூறி வருகிறார். தேமுதிக அடித்திருக்கும் போஸ்டர்களிலும் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்பதே இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர் மாநாட்டிற்கான போஸ்டர்தான் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் பஞ்சபாண்டவர்களாக கூறிக்கொள்ளும் தலைவர்கள் 5 பேரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் அணி என்ற பெயர் இடம் பெறவில்லை. மாறாக மக்கள் நலக்கூட்டணி என்ற வாசகம் மட்டுமே போஸ்டரில் உள்ளது.
ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி தேமுதிக அணியா? விஜயகாந்த் அணியா என்பதை கூறுவதிலேயே சர்ச்சைகளும், சங்கடங்களும் நீடிக்கும் நிலையில் போஸ்டரில் பேரை போடுவதிலும் சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வரை கூட்டணி நிலைக்குமா? என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது பொதுமக்களிடையே...

No comments
Thank you for your comments