Breaking News

2ஜி விவகாரத்தில் கனிமொழி பலி ஆடு.. ஸ்டாலினுக்கு பங்கு: வைகோ ஆவேச பேச்சு

திருச்சி, மார்ச் 26-
2ஜி வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷாவின் மரணத்தின் பின்னணி குறித்து சி.பி.ஐ முறையாக விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

திருச்சியில் இன்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
மாநாடுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, இந்த மாநாடு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக என் மீது தி.மு.க வழக்கு தொடுத்திருக்கிறது.

இதே போன்ற ஒரு ஊழல் குற்றச்சாட்டை 2006 சட்டமன்ற தேர்தலின் போது கூறினேன். அப்போது என் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்கள். வழக்கு தொடுத்தவர்கள் பத்து ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்மீது வழக்கு போட சொல்லி கலைஞர் கருணாநிதி சொல்லியிருக்க மாட்டார்.

2 ஜி வழக்கில் கனிமொழி பலி ஆடாக்கப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் கலைஞர் குடும்பத்தில் பதுங்கிக்கொண்டார்கள். சாஹித் பால்வா சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது? கோடிக்கணக்கான பணத்திற்கு டி.டி. கொடுக்கப்பட்டது என்கிறார்களே அது யாரிடம் கொடுக்கப்பட்டது?

ஸ்டாலினுக்கும் சாஹித் பால்வாவிற்கும் இருக்கும் உறவை அவர்களால் சாகடிக்கப்பட்ட சாதிக் பாட்ஷா சி.பி.ஐ விசாரணையில் சொன்னார் என்பதாலேயே தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்ஷாவின் மரணத்தின் பின்னனி என்ன என்பதை சி.பி.ஐ ஒழுங்காக விசாரிக்க வேண்டும்.

சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கு தி.மு.க தான் காரணம் என நான் குற்றம் சுமத்துகிறேன். இதற்கு ஒரு வழக்கு போட்டுக்கொள்ளட்டும். இதற்கு வழக்கு போட வக்கில்லாத ஸ்டாலின், ஆத்திரத்தில் மனசு துடித்து வழக்கு போட்டிருக்கிறார்.

2 ஜி விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கிருக்கிறது என நான் சொல்கிறேன். இதற்கும் ஒரு வழக்கை போட்டுக்கொள்ளட்டும் என பேசியுள்ளார்.

No comments

Thank you for your comments