மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை
சென்னை, மார்ச் 8-
தமிழ்நாடு சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை
விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் தேர்தல் தொடர்பான
முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஓட்டுச்சாவடி அமைப்பது, மனு பெறுவது, பரிசீலனை செய்வது, ஓட்டு
எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி
ராஜேஷ் லக்கானி தலைமையில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு
முழுவதும் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் தேர்தல் ஏற்பாடு பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகளை ராஜேஷ் லக்கானி தினமும் ஆய்வு செய்து வருகிறார். நேற்று
சென்னை எழும்பூரில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள
தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 32 மாவட்டங்களைச்
சேர்ந்த 64 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தேர்தல் தொடர்பான
தகவல்கள் மற்றும் புகார்கள் அளிப்பதற்காக ஆன்லைன் செயலி (அப்ளிகேஷன்)
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான எல்லா புகார்களையும்
தெரிவிக்கலாம்.
ஏற்கனவே நடந்த சட்டசபை தேர்தல் விஷயங்களையும் இந்த செயலி மூலம்
தெரிந்து கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா
என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பதை மாநிலம் முழுவதும்
பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பொது மக்களும் இதில்
அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் எந்த இடத்திலாவது
மீறப்பட்டால் அது பற்றி பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு
படங்கள், தகவல்கள் அனுப்பி புகார்கள் அளிக்கலாம்.
9444123456 என்ற எண்ணை இதற்காக அறிவித்துள்ளோம். இந்த தொலைபேசி எண்ணை
பயன்படுத்தி புகார்களை வாட்ஸ்-அப் மூலம் தரலாம். ஆதாரப்பூர்வமாக வரும்
வாட்ஸ்-அப் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர
1950 என்ற எண்ணிலும் புகார்களை அளிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் மின்னணு
எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. 90 சதவீத எந்திரங்களை சரிபார்க்கும்
பணி முடிந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments