Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் 301 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது வேறு மாவட்டங்களிலிருந்து தி.மலைக்கு கொண்டுவர மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை

தி.மலை, மார்ச் 16-
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சீரமைப்பு பணி முடிவடைந்தது. அதில் 301 மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16ந் தேதி நடைபெறவுள்ளது. அதையட்டி வாக்காளர் பட்டியல் தயாரித்தல் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை,
கீழ்பென்னாத்தூர், செங்கம் (தனி), கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி கடந்த மாதம் 24ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. இப்பணியில பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் வருவாயத்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி 5678 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4186 கட்டுப்பாட்டு இயந்திரங்களை தனித்தனியே சரிபார்த்து தேர்தலில் பயன்படுத்த தகுதியானதா என உறுதிபடுத்தும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. அதில் 242 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 59 வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்டிருந்த பழுதுகளை பெல் பொறியாளர்களால் சீரமைக்க இயலவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டன்களில் பழுது, பதிவு விவரங்கள் தெளிவாக பதிவாகாதது. வாக்களிக்கும்போது பீப் எனும் ஒலி எழுப்பாதது என பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இவற்றை மீண்டும் சீரமைத்து பயன்படுத்தினாலும் தேர்தல் நேரத்தில் குளறுபடி ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே 301 மின்னணு இயந்திரங்களுக்கு மாற்றாக அதிக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பிலுள்ள மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கொண்டுவருவதற்கான மாற்று ஏற்பாடுகளை தி.மலை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அ.ஞானசேகரன் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments