10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்
சென்னை, மார்ச் 15-
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.
இந்தத் தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 210 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
இன்று தொடங்கிய 10ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதி முடிவடையும்.
தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளைத்
தடுக்க பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் செயல்படுகின்றனர்.
காலை 9.30 மணிக்குத் தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள்
தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 16ம் தேதி தமிழ் இரண்டாம் தாளும், மார்ச் 22ம்
தேதி ஆங்கிலம முதல்தாள் மற்றும் மார்ச் 29ம் தேதி ஆங்கிலம் 2ம் தாளுக்கான
பரிட்சைகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 4ம் தேதி கணிதம், ஏப்ரல் 7ம் தேதி
அறிவியல், ஏப்ரல் 11ம் தேதி சமூக அறிவியல் மற்றும் ஏப்ரல் 13ம் தேதி
சிறுபான்மை இன மொழித் தேர்வுகளும் நடைபெறுகின்றன.
விரும்பிய மொழியில் எழுதலாம்
10ம் வகுப்புத் தேர்வில் முதல் மொழிப் பாடமாக தமிழ் மட்டுமே இருந்து
வந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இதைத் தளர்த்தி, தமிழுக்குப் பதில்
தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தேர்வு எழுத அனுமதி
அளித்துள்ளது.
தற்போது பிளஸ்டூ தேர்வு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்த
தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி
வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன.
இதையடுத்து திட்டமிட்டபடி தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை
திருத்தும் பணி நேற்று தொடங்கியது. மொத்தம் 74 முகாம்களில் விடைத்தாள்
திருத்தும் பணி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் இந்த பணி
தொடங்கியது. ஏப்ரல் 20ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
No comments
Thank you for your comments