Breaking News

வாக்குப்பதிவு நாளான மே 16 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை: ராஜேஷ் லக்கானி

சென்னை, மார்ச் 22-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளான மே 16 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்,

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்களிடம் ராஜேஷ் லக்கானி
கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள், கோட்ட வருவாய் அதிகாரி அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 363 வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 அந்த மையங்களில் இதுவரை புதிய வாக்காளர் அடையாள அட்டை கேட்டு 38 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. அவர்களுக்கு 15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

விரைவாக அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் "ஸ்பீடு போஸ்டு" மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக புதிய கார்டுக்கான கட்டணம் ரூ.25 உடன் தபால் செலவு ரூ.40 ம் சேர்த்து செலுத்தினால் விரைவில் அடையாள அட்டை கிடைக்கும்.

தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள், புதிய கட்சி அலுவலகங்கள் அமைக்கக்கோரி ஆன்லைன் மூலம் இதுவரை ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் 90 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 3 ஆயிரத்து 200 புகார்கள் வந்துள்ளன. அவற்றிற்கு ஒன்று முதல் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மற்றும் கமிஷனர்கள் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அதன் பின்னர் அவர்கள் விரைவில் தமிழகம் வருகிறார்கள். எப்போது வருகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை

 சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர் கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் துணி மற்றும் பொருட்கள் வாங்கும்போது கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகள் கொடுப்பது வழக்கம். அந்த பைகளில் "மே 16 தேதி வாக்குப்பதிவு நாள். தவறாமல் வாக்களியுங்கள்" என்ற வாசகத்தை அச்சிட்டு கொடுக்க தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களிடம் கூறியுள்ளோம். அந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும்.

வாக்குப்பதிவு நாளான மே மாதம் 16 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் "ஷிப்ட்" முறை இருந்தாலும் விடுமுறை விடுமாறு கூறியுள்ளோம். இதை தொழிலாளர் நலத்துறையினர் தீவிர கவனம் செலுத்தி அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணிப்பார்கள்.

விடுமுறை விடாத நிறுவனங்கள் பற்றி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கலாம். புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மே மாதம் 16 ஆம் தேதியன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்சுகள் 750 உள்ளன. அவற்றில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பணியாற்றுகிறார்கள்.

அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 108 ஆம்புலன்சில் பணியாற்றுபவர்கள் வெளியூர்காரர்களாக இருந்தால் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டால் வாக்களிப்பதற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்

பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்களா? என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகத்திலிருந்து பதில் வரவில்லை. பணம் கொண்டு செல்பவர்களிடம் பறக்கும் படையினர் கெடுபிடி செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்படும் பணத்துக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம்.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பணம் நடமாட்டம் பற்றி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வருமானவரித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒரு உதவி கமிஷனர், 3 ஆய்வாளர்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பறக்கும் படையினரின் செயல்பாடுகள் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.

கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைந்த வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு வாக்குப்பதிவு குறைந்ததற்கு என்ன காரணம் என்று கண்டறிவதற்காக வாக்குச்சாவடி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஆசிரியர் ஆகியோர் கொண்ட 6 ஆயிரத்து 600 கமிட்டிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

அந்த குழுவினர் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். எனவே தீவிரமாக தேர்தல் விழிப்புணர்வு நடத்தியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வாக்களித்த பின்னர் தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் கையெழுத்திட்ட புகைப்படம் அனுப்பி வைக்கப்படும்.

வாக்களித்ததற்காக ஊக்கப்பரிசு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. நடிகர்கள் நாசர், விஷால் ஆகியோர் நடித்த வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறும்படங்கள் தயாராகி வருகின்றன.

100 சதவீதம் வாக்குப்பதிவை அடைவதற்காக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 650 பேருந்து நிறுத்தங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மற்ற மாவட்டங்களில் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பற்றிய செய்திகளை ஒளிபரப்பும் 13 சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவை தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகத்துக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

No comments

Thank you for your comments