Breaking News

அப்துல்கலாம் லட்சிய கட்சி

கனவு தமிழகத்தை உருவாக்க புதிய கட்சி தொடங்கிய ஆலோசகர் பொன்ராஜ்!

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக, அப்துல்கலாம் லட்சியக் கட்சி என்ற புதிய கட்சியை அவரது ஆலோசகர் பொன்ராஜ் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் நேற்று அரசியலுக்கான அழைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பு மற்றும் ’விஷன் 2020’ அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர் - மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்கள் ஊழல் நிறைந்த ஆட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஒழுக்கமான நம்பிக்கைக்கு உரிய தலைமைப் பண்பு கொண்டவர் தலைமையேற்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பேசிய போது, ‘மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் கலாமின் கொள்கையான தரமான கல்வி, தொழில் முன்னேற்றம், இதற்காக பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே இளைஞர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அரசியலில் இறங்குகிறேன்.

ராமேஸ்சுவரம், பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அஞ்சலி செலுத்தினார், அதன் பின்னர், அப்துல்கலாம் லட்சியக் கட்சி  என்று கட்சி பெயரை அறிவித்தார்.

மேலும், அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது,

‘அன்பு நண்பர்களே, பரிபூரண மாற்றத்தை நிகழ்த்துவதற்காக இன்று முதல் உழைப்போம். 5 வருடம் ஆகலாம், 10 வருடம் ஆகலாம், 15 வருடம் ஆகலாம் - அது முக்கியமல்ல. வளர்ந்த தமிழ்நாட்டை அடைவதற்கு டாக்டர் கலாம் அவர்கள் கனவு கண்ட லட்சியத்தின் மூலம், நம் முயற்சியை இன்று ஆரம்பிப்பதுதான் முக்கியம். வாழ்க தமிழகம். வளர்க தமிழ் இனம். வாழ்க டாக்டர் அப்துல் கலாம் புகழ்' எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments