போர்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இலங்கை தயார் - ரணில் விக்ரமசிங்கே
கேரளா, பிப்.13:
கேரளாவில் உள்ள குருவாயூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உலக
பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
நேற்று தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கேயுடன் வந்து சிறப்பு வழிபாடு
நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில்
போர்க்குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச
பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எங்கள் அரசாங்கம்
தயங்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை
நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புகள்
போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கலாம்.
பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்கள் ராணுவத்தினராக இருந்தாலும்
சரி, விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரி அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்
என்பதை உறுதி செய்ய அரசு விரும்புகிறது. ராணுவத்தாலோ அல்லது புலிகளாலோ
எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது போன்றவற்றை வரையறுக்க சர்வதேச பங்களிப்பை வரவேற்கிறேன். ஆனால்,
இறுதி தீர்ப்பு இலங்கை நீதித்துறை அமைப்புக்கு உட்பட்டே இருக்கும். இதற்கு
முன் இலங்கையின் நீதித்துறை அமைப்பு சீர்குலைந்திருந்தது. ஆனால், இப்போது
இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளில் ஒவ்வொரு நாட்டின்
இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments