“4 வகைகளாகக் குப்பைகளைப் பிரிக்க வேண்டும்; மீறினால் கடும் அபராதம்!” - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி எச்சரிக்கை!
காஞ்சிபுரம் | அக்டோபர் 03, 2026
காந்தி ஜெயந்தியை (அக். 02) முன்னிட்டு, ‘தூய்மை சேவையே இறை சேவை-2026’ மற்றும் ‘தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0’ திட்டங்களின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் தலைமையில், மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்களுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாகும் கழிவுகளை 100 சதவீதம் 4 பிரிவுகளாகத் தரம் பிரிப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
4 வண்ணத் தொட்டிகள் - குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகள்:
பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் கழிவுகளைக் கீழ்க்கண்டவாறு 4 தனித்தனி நிறத் தொட்டிகளில் பிரித்து வைத்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது:
- பச்சை நிறத் தொட்டி (மக்கும் கழிவுகள்): காய்கறி கழிவுகள், சமையல் உணவு கழிவுகள் மற்றும் பழக் கழிவுகள்.
- நீல நிறத் தொட்டி (உலர்ந்த கழிவுகள்): பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் உலோகப் பொருட்கள்.
- சிவப்பு நிறத் தொட்டி (சுகாதாரக் கழிவுகள்): பயன்படுத்திய நாப்கின்கள், டயாப்பர்கள் மற்றும் வீட்டு உபயோக மருத்துவக் கழிவுகள்.
- கருப்பு நிறத் தொட்டி (சிறப்பு கவனிப்புக் கழிவுகள்): மின் விளக்குகள் (Bulbs), பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் (E-Waste).
விதிமீறினால் கடும் அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை!
மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள்:
உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற மொத்தக் கழிவுகளை உருவாக்குபவர்கள் (Bulk Waste Generators) அனைவரும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் தங்களைப் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
கடும் அபராதம்:
வீடுகளில் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குப்பைகளைப் பொது இடங்களில் கொட்டுதல், தீயிட்டு எரித்தல், மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
No comments
Thank you for your comments