“ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்கு அனுப்ப மறுப்பு!” - பிரசவத்தின் போது பழங்குடி இருளர் பெண் பரிதாபப் பலி; காஞ்சிபுரத்தில் கொடூரம்!
காஞ்சிபுரம் | செப்டம்பர் 09, 2026
தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி விறகு வெட்டும் பணி
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாதக் கர்ப்பிணியான தேன்மொழி, தன் கணவர் ஆனந்தனுடன் இணைந்து ஆறுமுகம் என்பவரிடம் அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட் பகுதியில் கடந்த 6 மாதங்களாக விறகு வெட்டும் வேலை செய்து வந்துள்ளார்.
அங்கு ஆறுமுகம் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய் கூடாரத்திலேயே தங்கி இவர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் இவர்களது திருமணமான மகள் காவியா மற்றும் மருமகன் முத்து குடும்பமும் இணைந்து வேலை செய்து வந்தது.
.jpg)
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
“பணத்தைத் தராமல் போகக் கூடாது!” - முதலாளியின் இரக்கமற்ற செயல்
வேலைக்கு முன்பணமாக விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ஆனந்தன் தம்பதியினர் ரூ.20,000 கடன் வாங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று (09-09-2026) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்குத் திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, விறகு வியாபாரி ஆறுமுகம் குறுக்கிட்டுள்ளார்:
"வாங்கிய கடனைக் கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தை விட்டு எங்கும் செல்லக் கூடாது!"
— விறகு வியாபாரி ஆறுமுகம்
முதலாளி ஆறுமுகம் மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், வேறு வழியின்றி ஆனந்தன் பிரசவ வலியில் துடித்த தனது மனைவிக்கு விளக்கெண்ணெய் தடவிவிட்டு மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார்.
தார்ப்பாய் கூடாரத்திலேயே நேர்ந்த பரிதாப மரணம்
மருத்துவ உதவி எதுவுமின்றித் தார்ப்பாய் கூடாரத்தில் தன்னந்தனியே தவித்த தேன்மொழிக்குப் பிரசவம் ஆகத் தொடங்கியது. அப்போது, குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், கடுமையான வலி மற்றும் ரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலை 4:00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இது இயற்கை மரணம் என்று கூறி, படிப்பறிவில்லாத ஆனந்தனிடம் வெறும் ரூ.2,000 பணத்தைக் கொடுத்து, உடலை சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்துள்ளார்.
காவல்துறையில் புகார் - விசாரணை தீவிரமடைந்தது
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த 'மக்கள் மன்றம்' அமைப்பினர் உடனடியாக உதவிக்கு விரைந்தனர். மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஷ் தலைமையில், பொன்னேரி கரை காவல் நிலையத்தில் இக்கொடூரச் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மனிதநேயமற்ற முறையில் ரூ.20,000 கடனுக்காக கர்ப்பிணிப் பெண்ணையும் குழந்தையையும் பலிகொண்ட விறகு வியாபாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பழங்குடியின மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments