தமிழகத்தில் பரபரப்பு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது! - இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆகஸ்ட் 4:
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெக அரசை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை ஆர்ப்பாட்டமும் சர்ச்சை பேச்சும்
தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 3, ஞாயிற்றுக்கிழமை) திமுக சார்பில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வருவதாகக் கூறி தவெக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துச் சர்ச்சைக்குரிய வகையிலும், அவதூறாகவும் பேசியதாகத் தவெக அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீலாங்கரை இல்லத்தில் போலீஸ் குவிப்பு: அதிரடி கைது
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்வதற்காகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இன்று அதிகாலையிலேயே ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டனர். வீட்டின் வெளியே திமுக தொண்டர்கள் திரண்டதால் பெரும் பரப்பு நிலவியது.
காவல்துறை உயர் அதிகாரிகள், உதயநிதியின் குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, உதயநிதி ஸ்டாலினைப் போலீஸார் முறைப்படி கைது செய்தனர். கைதான அவரைத் தஞ்சாவூர் அழைத்துச் செல்லக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தஞ்சை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு
"ரீல்ஸ் வெறி முற்றிப்போன அரசு!" - கைதான பின் உதயநிதி ஆவேசம்
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
உதயநிதி ஸ்டாலின் பேட்டி: "நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வரும் தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகேதாட்டுவை எதிர்த்துக் குரல் கொடுக்கத் திராணியற்ற, தெம்பில்லாத அரசாக இருக்கிறது என்றுதான் பேசினேன்.
அரசு தன் தோல்விகளை மறைக்கவே இப்போது இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பும் வகையில், ரீல்ஸ் வெறி முற்றிப்போய் முதல்வரும், அமைச்சர்களும் ஆட்சி நடத்துகிறார்கள் என்றுதான் நேற்றைய கூட்டத்தில் பேசினேன். ஆனால், நான் பேசாத ஒன்றை பேசியதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்குப் பதிவு செய்து என்னைக் கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதனைச் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்."
உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் காவல்துறை குவிக்கப்பட்டது குறித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பகல் 12 மணிக்கு வழக்கினை விசாரிக்க ஒப்புக்கொண்டார். மேலும், அதுவரை உதயநிதி ஸ்டாலின் மீது எந்தவிதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் காவல்துறைக்கு அறிவுறுத்துமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவு வருவதற்கு முன்பாகவே காவல்துறை கைது நடவடிக்கையை நிறைவு செய்து, அவரைத் தஞ்சைக்கு அழைத்துச் சென்றுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதன் பின்னர் உதயநிதியின் முன் ஜாமீன் மனு, பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார்.
அப்போது அவர், “எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுவதாகவும், காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து இன்றே விடுவிக்க வேண்டும் எனவும், விசாரணையை நாளை வரை நீட்டிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும், காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உதயநிதிக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments