தமிழக பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள் |
சென்னை | ஆகஸ்ட் 05, 2026
தமிழக சட்டப்பேரவையில் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி, திட்டமிடல் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
"முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே பல துறைகளில் கனிசமான முன்னேற்றங்களும், மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் பல முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. நமது அரசு அறம், பொருள், இன்பத்தை நோக்கமாக வைத்து 10 தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்ட ஆவணத்தின் அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது" என்று நிதியமைச்சர் உரையில் குறிப்பிட்டார்.
முக்கியத் திட்டங்கள் & புதிய அறிவிப்புகள்:
- வெற்றி 150 (கிராம வேலை உறுதித் திட்டம்): 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
- வெற்றி வீடு திட்டம்: புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான இத்திட்டத்தில் வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. முதலாண்டில் 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு.
- அண்ணனின் சீர்: பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு.
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு.
- வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
- சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்: மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்த ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு. தகுதிபெறும் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்.
- வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: ஊரகப் பகுதி பெண்களுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.
- காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது (ரூ.710 கோடி).
- அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு: அடிப்படை காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்வு (அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை).
முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்:
| துறை / பிரிவு | ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாயில்) |
| பள்ளிக் கல்வித் துறை | ₹44,527 கோடி |
| ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | ₹39,609 கோடி |
| நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் | ₹29,863 கோடி |
| நெடுஞ்சாலைகள் & சிறு துறைமுகங்கள் | ₹21,524 கோடி |
| உள்துறை, மதுவிலக்கு & ஆயத்தீர்வை | ₹17,290 கோடி |
| எரிசக்தித் துறை | ₹15,828 கோடி |
| வேளாண் மற்றும் உழவர் நலத் துறை | ₹14,984 கோடி |
| உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு | ₹14,830 கோடி |
| போக்குவரத்துத் துறை | ₹13,561 கோடி |
| நீர்வளத் துறை | ₹9,264 கோடி |
| உயர் கல்வித் துறை | ₹8,393 கோடி |
சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு & இதர சிறப்பம்சங்கள்:
- நதி இணைப்பு & மேகேதாட்டு எதிர்ப்பு: நதி இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு (காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு ரூ.150 கோடி). மேகேதாட்டு உள்ளிட்ட தமிழக உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
- சென்னை மின்சாரப் பேருந்துகள்: சென்னைக்கு 1,000 புதிய AC மின்சாரப் பேருந்துகள் (EV Buses) வாங்கப்படும். EV பணிமனை உட்கட்டமைப்பிற்கு ரூ.500 கோடி.
- சென்னை 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் ஆகிய 3 புதிய பாதைகளுக்கு மாநில அரசு பரிந்துரை.
- கூவம், அடையாறு சீரமைப்பு: சென்னை கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் நதிக்கரை நடைபாதை, படகு சவாரியுடன் சீரமைக்கப்படும்.
- மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு: 100 கிராமங்களில் சூரிய மின்வேலி மற்றும் எஃகு வேலிகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
- போதையில்லா தமிழகம்: போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.

No comments
Thank you for your comments