Breaking News

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஆக உயருமா? | தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!


மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஆக உயருமா? தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை, ஜூலை 21- 

தமிழக சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 

“2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்குச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை (Agriculture Budget) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். அதில் விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

🎥 நேரலை செய்யப்படும் பேரவை நடவடிக்கைகள்!

சட்டப்பேரவைச் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர், 

“சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும். வாக்களித்த மக்களும், வாக்களிக்காத பெருமக்களும் வியந்து பாராட்டும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என நம்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முழு விவாதத்தில் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய உரிமை உண்டு. அதேவேளையில், மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படும் போது அமைதியாகக் கேட்டு விவாதிக்க வேண்டும். பேரவை அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

⚖️ மார்க்கண்டேயன் கைது & விஜய் சைகை: சபாநாயகர் விளக்கம்!

சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது குறித்துப் பேசியவர், 

எம்.எல்.ஏ-க்களைக் கைது செய்யச் சபாநாயகரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், பேரவை எல்லைக்குள்ளாகக் கைது செய்ய மட்டுமே சபாநாயகரின் அனுமதி தேவை என்றும் விளக்கமளித்தார். 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்கும் பட்சத்தில் மற்ற உறுப்பினர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அதேபோல், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் சைகை காட்டியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 

முதலவர் விஜய் விதிகளுக்கு உட்பட்டே சைகை காட்டியதாகவும், அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் சைகை காட்ட அனுமதி கேட்டால், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

💰 எதிர்பாரப்பில் மகளிர் உரிமைத் தொகை!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தாக்கல் செய்யப் போகும் முதல் பட்ஜெட் இது என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதேபோல் தவெக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட குடும்பத்திற்கு 6 சிலிண்டர் திட்டம், உயர்கல்வி மாணவர்களுக்கான திட்டம் உள்ளிட்டவை குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றாவது முதல் பட்ஜெட்டிலேயே இடம்பெறும் என்று மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஒருவேளை போதுமான நிதி இல்லை என்றால் கூட, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின், ஸ்டாலின் முதல் கையெழுத்தாக விடியல் பேருந்து திட்டத்தை செயல்படுத்தினார். அதே பாணியில் முதல் பட்ஜெட்டிலேயே இந்த திட்டத்தை முதல்வர் விஜய் விரிவாக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டபடி மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500-ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்குப் பூர்த்தி செய்யப் போகிறது என்பது பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகே தெரியவரும்.

No comments

Thank you for your comments