Breaking News

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

 சென்னை | ஜூலை 04, 2026

தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் மிக முக்கிய மாற்றங்களைச் செய்யும் நோக்கில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக இஸ்ரோவின் முன்னாள் புகழ்பெற்ற விஞ்ஞானி முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆட்சிக்காலத்தில் இந்தப் பதவியில் திண்டுக்கல் ஐ.லியோனி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு:

அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பள்ள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 14 பேர் கொண்ட புதிய பாடத்திட்ட வடிவமைப்பு உயர்நிலைக் குழுவை அமைத்துப் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

குழுவின் முக்கிய உறுப்பினர்கள்:

  • தலைவர்: முனைவர் மயில்சாமி அண்ணாதுரை (முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி)
  • உறுப்பினர்கள்: விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 கல்வியாளர்கள்.
  • உறுப்பினர்-செயலாளர்: மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநர்.
  • பதவிக்காலம்: இக்குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாறப்போகும் புதிய பாடத்திட்டம்:

கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, ஆசிரியர்-பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைப் பெற்று முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தியிருந்தது.

"தற்போது பொறுப்பேற்றுள்ள மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான புதிய குழு, வரும் நாட்களில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கு உலகத்தரம் வாய்ந்த புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கும். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்தடுத்த கட்டங்களாகப் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்."

விஞ்ஞானத் தொழில்நுட்பம் மற்றும் நவீன கல்வி முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமையவுள்ளதால், இந்த நியமனம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments

Thank you for your comments