Breaking News

சோகம்: காஞ்சிபுரம் அருகே மின்வேலியில் சிக்கி முதிய தம்பதியர் பரிதாப பலி – விவசாயக் குடும்பத்தில் நிலவும் பெரும் சோகம்!


 காஞ்சிபுரம் | மார்ச் 30, 2026

காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் கிராமத்தில், விளைநிலத்தைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததில் முதிய தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்துப் பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



சம்பவத்தின் பின்னணி:

காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (80). இவரது மனைவி ராணி (75). விவசாயிகளான இத்தம்பதியர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நெல் மற்றும் வாழை பயிரிட்டு வந்தனர். இப்பகுதியில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால், பயிர்களைப் பாதுகாக்கத் தங்கள் வயலைச் சுற்றி மின்கம்பி வேலி அமைத்திருந்தனர்.


நேர்ந்த விபத்து:

வழக்கமாகத் தங்களது நிலத்தில் உள்ள பம்புசெட்டிலேயே இரவு தங்குவதை இத்தம்பதியர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதேபோல் சனிக்கிழமை இரவு பம்புசெட்டிற்குச் சென்றவர்கள், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர்களது மகன் வயலுக்குச் சென்று தேடியபோது, கன்னியப்பனும் ராணியும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காவல்துறை விசாரணை:

தகவலறிந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர், உயிரிழந்த தம்பதியரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தங்களது விளைநிலத்தைப் பாதுகாக்க அமைத்த வேலையே தங்களது உயிரைப் பறித்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Thank you for your comments