Breaking News

நல்லூரில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் துறை கட்டும் பணி: காங்கிரஸ் நிர்வாகிகள் புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு – கூட்டணிக்குள் விரிசல்?

 நல்லூர் | மார்ச் 13, 2026

கடலூர் மாவட்டம் நல்லூர் அருகே உள்ள மணிமுத்தாறு கரையில், நீண்ட கால கோரிக்கையான புதிய துறை கட்டும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. ஆனால், இந்த அரசு விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கிளம்பியுள்ள சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.



திட்டத்தின் பின்னணி:

நல்லூர் ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் மணிமுத்தாறு கரையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி கொடுக்கவும் வசதியாக ஒரு பாதுகாப்பான துறை (Ghat) வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதனை ஏற்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பூமிபூஜை நிகழ்வு:

இன்று நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இதற்கான பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.

காங்கிரஸ் தொண்டர்களின் குமுறல்:

விழா சிறப்பாக நடைபெற்றாலும், காங்கிரஸ் கட்சியினரிடையே இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் வட்டார நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்:

  • "திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், இத்திட்டத்தின் தொடக்க விழாவில் எங்களை முறையாக அழைக்கவில்லை."
  • "அனைத்து இடங்களிலும் திமுகவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்." எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே தொகுதி பங்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாக ரீதியாகச் சிறு சிறு சலசலப்புகள் நிலவி வரும் வேளையில், இந்த அரசு விழாவில் ஏற்பட்ட 'புறக்கணிப்பு' விவகாரம் நல்லூர் மற்றும் வேப்பூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: R. காமராஜ், விருத்தாசலம்.


No comments

Thank you for your comments