தென் இந்தியாவின் பிரமாண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி ரினியூஎக்ஸ் 2026’ சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 27–29
கோவை,தென் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியான ‘ரினியூஎக்ஸ் 2026’ (RenewX 2026) வரும் ஏப்ரல் 27 முதல் 29 வரை 3 நாட்கள், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் இந்தியா, சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை வல்லுநர்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். 8,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.சூரிய ஒளி மின்சாரம், எரிசக்தி சேமிப்பு, ஸ்மார்ட் கிரிட் மேலாண்மை மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு போன்ற துறைகளில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
கண்காட்சிக்கு முன்னதாக, கோவையில் தொழில்துறை வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.இந்தியா உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவும் திறனில் 4-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, சோலார் மின் உற்பத்தி திறன் கடந்த 2014-இல் 2.82 ஜிகாவாட் இருந்தது, தற்போது 143.6 ஜிகாவாட் ஆக உயர்ந்து, 50 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் நாடு முழுவதும் முன்னிலை வகிக்கும் தமிழகத்தில், சூரிய ஒளி மின்சக்தியிலும் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், சோலார் மின் பலகைகள் நிறுவலில் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.
இந்த கண்காட்சி, தொழில்துறை ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முக்கிய தளமாக அமையும் என்றும், இந்தியாவின் 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய உதவும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று, சர்வதேச வர்த்தகம், விநியோகச் சங்கிலி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற முக்கிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
செய்தியாளர்: பா.லீலாகிருஷ்ணன்📱99942 55455



No comments
Thank you for your comments