Breaking News

"வெறும் காகிதத்தில் மட்டுமே எங்களின் பந்தம்!" - 12 பக்க மனுவில் சங்கீதா அடுக்கியுள்ள அதிரடிப் புகார்கள்!



 செங்கல்பட்டு | பிப்ரவரி 27, 2026

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான 27 ஆண்டுகால திருமண உறவு முறிவை நோக்கிச் சென்றுள்ள நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள 12 பக்க மனுவில் உள்ள உருக்கமான மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. உடைந்த நம்பிக்கை: 

"கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என் கணவர் ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதை அறிந்தேன். இனி அந்த உறவைத் தொடரமாட்டேன் என்று அவர் கொடுத்த உறுதிமொழியை நம்பினேன். ஆனால், அவர் மீண்டும் அதே உறவில் நீடித்தது எங்களது திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாகக் குலைத்துவிட்டது."

2. வெளிநாட்டுப் பயணங்களும் சமூக வலைதளப் பதிவுகளும்: 

"விஜய்யும் அந்த நடிகையும் பலமுறை ஒன்றாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை அந்த நடிகை தனது சமூக வலைதளங்களில் பகிரும்போதெல்லாம், விஜய் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; ஆமோதிக்கவும் இல்லை. இது எனக்கும் என் குழந்தைகளுக்கும் பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது."

3. கவுன்சிலிங் தோல்வி: 

"இந்த விவகாரத்தைச் சுமுகமாகத் தீர்க்க 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரையிலும், மீண்டும் 2024 ஆகஸ்ட் முதல் 2025 பிப்ரவரி வரையிலும் பலமுறை கவுன்சிலிங் மூலம் முயற்சி செய்தேன். ஆனால், எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் பொறுமை காத்தேன்."

4. தனிமைப்படுத்தலும் பொருளாதாரக் கட்டுப்பாடும்: 

"இந்த விவகாரத்தைத் தட்டிக்கேட்டதால், விஜய் என்னைத் தனிமைப்படுத்தினார். சுமுகமாகப் பிரிய நான் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது கூட, அவர் ஒத்துழைக்காமல் என் மீதான பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார்."

நடிகையின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை?

"இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருடைய கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு, இப்போதைக்கு அந்த நடிகையின் பெயரை நான் மனுவில் குறிப்பிடவில்லை. ஆனால், தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்ற அனுமதியோடு அந்தப் பெயரைச் சேர்க்கும் உரிமை எனக்கு உண்டு" என்று சங்கீதா அந்த மனுவில் எச்சரித்துள்ளார்.

"மீண்டும் இணைய வாய்ப்பில்லை"

கடைசியாக 9.11.2025 அன்று மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "எங்களது திருமண பந்தம் மீண்டும் இணைய முடியாத அளவுக்கு உடைந்துவிட்டது. இப்போது அது வெறும் காகிதத்தில் மட்டுமே நீடிக்கிறது" என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.





No comments

Thank you for your comments