திட்டக்குடி அருகே பயங்கரம்: அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே பலி!
திட்டக்குடி, பிப். 4:
விபத்தின் விவரம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (55), கணவர் சின்னையன். இவர் இன்று மங்களூர் - பாசார் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப்பள்ளி அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:
இந்தக் கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னம்மாள், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை:
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சின்னம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்கு அருகிலேயே நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments