கோணாங்குப்பத்தில் வீரமாமுனிவர் 279-வது நினைவு நாள்: பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
மங்கலம்பேட்டை, பிப். 5:
தமிழ் தொண்டாற்றிய வீரமாமுனிவர்:
இத்தாலி நாட்டில் பிறந்து கிறித்தவ மதத்தைப் பரப்ப தமிழகம் வந்த கான்ஸ்டைன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர், தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் அதைக் கற்றுத் தேர்ந்து பெரும் தொண்டாற்றினார்.
- திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார்.
- இவரால் இயற்றப்பட்ட 'தேம்பாவணி' தமிழின் மிகச்சிறந்த காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
- இவர் கோணாங்குப்பத்தில் தங்கியிருந்தபோதுதான் எழில்மிகு புனித பெரியநாயகி மாதா தேவாலயத்தைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைவு நாள் நிகழ்வுகள்:
திருத்தலப் பங்குத்தந்தை ஆக்னல் அடிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில், திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள வீரமாமுனிவரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முகாசப்பரூர் ஜமீன் பாளையக்காரர் வழித்தோன்றலான வீரசேகர பொன்னம்பல ரமேஷ் கச்சராயர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
பங்கேற்றவர்கள்:
இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமர், பங்கு பேரவை துணைத் தலைவர் வில்லியம் ஜெயராஜ், பொருளாளர் சாமிநாதன், திருத்தல வேதியர் ஜோசப், அருட்சகோதரி ஜெனி, ஆசிரியை அமல லதா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஊர் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments