விருத்தாசலத்தில் பரபரப்பு: நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கவுன்சிலர் உண்ணாவிரதம்! போலீசாருடன் வாக்குவாதம் - பொதுமக்கள் அதிரடி கைது.
விருத்தாசலம் | ஜனவரி 5, 2026:
பணியில் மெத்தனம் - மக்கள் கொதிப்பு: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு மாணிக்கவாசகர் நகர் மற்றும் புதுக்குப்பம் பகுதிகளில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, 3-வது வார்டு சுயேச்சை நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
முக்கியக் கோரிக்கைகள்:
- சாலை வசதி: கடந்த 4 மாதங்களாகத் தனிநபர் ஒருவரால் தடைபட்டுள்ள சிமெண்ட் சாலைப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வேண்டும்.
- குடிநீர் வசதி: புதுக்குப்பம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும்.
- தெருவிளக்கு: புதிய தெருவிளக்குகளுக்காக மின்சாரத் துறைக்குச் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை நகராட்சி நிர்வாகம் உடனடியாகச் செலுத்த வேண்டும்.
- வடிகால்: புதுக்குப்பம் பகுதியில் புதிய வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட வேண்டும்.
போலீசார் வலுக்கட்டாயக் கைது: தகவல் அறிந்து வந்த நகராட்சி பொறியாளர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதிகாரிகள் அளித்த உறுதிமொழிகளில் உடன்பாடு எட்டப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த விருத்தாசலம் போலீசார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments