விருத்தாசலத்தில் சௌமியா அன்புமணி அதிரடி! "மதுக்கடைகளை மூடும் அதிகாரம் அன்புமணி ராமதாஸிடமே உள்ளது" - மகளிர் உரிமை மீட்புப் பயணம்!
விருத்தாசலம் | டிசம்பர் 29, 2025
"சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற முழக்கத்தோடு, பசுமைத் தாயகத் தலைவர் சௌமியா அன்புமணி மேற்கொண்டு வரும் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பா.ம.க மகளிர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெய்வேலி என்.எல்.சி-யால் நிலத்தடி நீர் பாதிப்பு:
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய சௌமியா அன்புமணி, "நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி எடுப்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு மீதான விமர்சனம்:
தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாகச் சாடிய அவர் பேசியதாவது:
"ஆயிரம் ரூபாயை டாஸ்மாக் மூலம் பிடுங்கிக் கொண்டு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தால் பெண்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று ஆளும் கட்சி நினைக்கிறது. மதுப் பழக்கத்தால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது."
மதுவை ஒழிக்க அன்புமணி ராமதாஸால் மட்டுமே முடியும்:
"ஆட்சியில் இல்லாத போதே நீதிமன்றப் போராட்டங்கள் மூலம் நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடிய பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பின்னால் நின்றால், அவர் விரைவில் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவார்" என உறுதியளித்தார்.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
மாநில மகளிர் சங்கச் செயலாளர் தமிழரசி ஆதிமூலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பா.ம.க மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டத் தலைவர் ஆடியபாதம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.


No comments
Thank you for your comments