காஞ்சியில் அதிரடி: "ஏழைப் பெண்களின் வயிற்றில் அடிக்காதே!" - 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம் | டிசம்பர் 25, 2025:
பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: மத்திய அரசு இத்திட்டத்தின் பெயரை 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்' என மாற்றியுள்ளது. இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பின.
காஞ்சிபுரத்தில் திரண்ட தலைவர்கள்: காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் பி.எம். குமார் அனைவரையும் வரவேற்றார்.
இதில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் மற்றும் தலைமைக்கழகப் பேச்சாளர் நாத்திகம் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துப் பேசினர்.
விண்ணதிரும் முழக்கங்கள்: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள், "100 நாள் வேலைத் திட்டத்தை முடக்காதே!", "ஏழைப் பெண்களின் வயிற்றில் அடிக்காதே!", "தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியைக் குறைக்காதே!", "இந்தியைத் திணிக்காதே!" என விண்ணதிரும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
கூட்டணி கட்சிகள் பங்கேற்பு: இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஜி.வி. மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கே. நேரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தி.வ. எழிலரசு, மதிமுக சார்பில் கருணாகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments