Breaking News

காஞ்சிபுரத்தில் ஆதியோகி சிவன் விழிப்புணர்வு பிரச்சார யாத்திரை


காஞ்சிபுரம்,டிச.26:

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் வடக்கு மண்டலம் சார்பில் ஆதியோகி சிவன் ரதம் மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரச்சார யாத்திரையை காஞ்சிபுரத்திலிருந்து தொடங்கியது.

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் வடக்கு மண்டலம் சார்பில் மகாசிவராத்திரியையொட்டி விழிப்புணர்வு மேற் கொள்வதற்காக ஆதியோகி சிவன் ரதம் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் முன்பிருந்து யாத்திரை தொடங்கியது.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் ரதத்திலிருந்த ஆதியோகி சிவன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனைகள் நடத்தி ரதயாத்திரையை தொடங்கி வைத்தார்.முன்னதாக ஆதீனம் அவர்களுக்கு ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவிலிருந்து ரதயாத்திரை நிர்வாகிகள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

ரதயாத்திரை தொடக்க விழாவில் காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம், மருத்துவர் நிஷாப்பிரியா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ரதயாத்திரையானது நகரில் 4 ராஜவீதிகள் வழியாக வந்து கச்சபேசுவரர் கோயில் முன்பாக நிறைவு பெற்றது.இதனைத் தொடர்ந்து நால்வர்களால் பாடல் பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களான திருமேற்றலீசுவரர் கோயில், ஓணகாந்தேசுவரர் கோயில், சத்தியநாதேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கும் சென்று அப்பகுதியில் மகா சிவராத்திரி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஈஷா யோகா மைய வடக்கு மண்டல தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments