தேவிரியம்பாக்கத்தில் மாதிரி கிராமசபைக் கூட்டம்... பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம், நவ.15:
காஞ்சிபுரம் மாவட்டம் வாôஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தில் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி முழுவதும் மாணவர்களாலேயே மாதிரி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களே ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர்,ஊராட்சி மன்ற செயலாளர்,சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர் ஆகியோராக கூட்டத்தில் அமர்ந்தனர்.
மாதிரி கிராமசபைக் கூட்டத்தில் சாலை வசதி,குடிநீர் மேலாண்மை, மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், நலத்திட்டங்கள் செயலாக்கம் ஆகியனவற்றை மையப்படுத்திய தீர்மானங்களை முன்வைத்து மாணவர்கள் விவாதித்து விளக்கிக் காட்டினார்கள்.
பொதுப்பிரச்சினைகளை விவாதித்தல், பட்ஜெட் ஆலோசனை, வளர்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கும் விதங்கள் போன்ற செயல்பாடுகளையும் மாதிரி கிராமசபைக் கூட்டத்தில் செய்து காட்டினார்கள்.ஊரக வளர்ச்சித்துறை மாநில பயிற்றுநர் அரவிந்தன் மாணவர்களின் விவாதங்களை நெறிப்படுத்தினார்.
நிகழ்வுக்கு பள்ளியின் நிர்வாகி சாந்தி தலைமை வகித்தார்.பள்ளி முதல்வர் சந்தியா வரவேற்று பேசினார்.
பள்ளியின் தாளாளர் மா.த.அஜய்குமார் பள்ளி மாணவர்களுக்கு கிராம சபை அமைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கவே இந்த ஏற்பாட்டினை செய்ததாக தெரிவித்தார்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments