Breaking News

அரசு மதுபானக்கடையை அகற்றக் கோரிக்கை-படப்பை கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் புதியதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலிருந்து வண்டலூர் செல்லும் நெடுஞ்சாலையில் படப்பை பகுதியில் வியாழக்கிழமை அரசு மதுபானக்கடை புதியதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் ஊருக்குள் ஏற்கனவே ஒரு அரசு மதுபானக்கடை உள்ள நிலையில் மேலும் ஒரு மதுபானக்கடை நெஞ்சாலைப் பகுதியில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுப்பிரியர்களால் விபத்துகள் ஏற்படலாம் என்பதாலும்,புதியதாக திறக்கப்பட்ட மதுபானக்கடைக்கு அருகில் பள்ளிகள் இருப்பதாலும் உடனடியாக அம்மதுக்கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி படப்பை கிராமத்தை சேர்ந்த மகளிர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கையில் பதாகைகளையும் வைத்துக் கொண்டு கோஷங்களையும் எழுப்பினர்.இந்த நிலையில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ரவிச்சந்திரன் அவர்களது குறைகளை கேட்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments