Breaking News

காஞ்சிபுரத்தில் கடந்த 3 நாட்களில் நீரில் மூழ்கி 5 பேர் சாவு


காஞ்சிபுரம், நவ.3:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர எல்லையோரப்பகுதிகளில் கனமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள்,குளங்கள் நிரம்பி வருகிறது. பல ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் இம்மாதம் 1 ஆம் தேதி சின்னக்காஞ்சிபுரம் அம்மங்காரத் தெரு வைச் சேர்ந்த சங்கரநாராயணன்(18) நத்தப்பேட்டே ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.


அதே நாளில் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான சிவசங்கரன்(29) ஓரிக்கை அருகை பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.இவர் இரு நாட்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் அருகே சின்னையன்குளம் பகுதியில் சடலமாக தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டார்.

இம்மாதம் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரியில் லாரி டயர் டியூப்பில் சென்று கொண்டிருந்த அக்கிராமத்தைச் சேர்ந்த பாலா(22) திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.கிராம பொதுமக்களும் தீயணைப்புத்துறையினரும் சடலமாக மீட்டனர்.

பாலா நீரில் மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த அதே தாமலைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மணவாளன் (32) அவரைக் காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மழ்கி உயிரிழந்தார்.

தீயணைப்புத்துறையினர் திங்கள்கிழமை மணவாளனை சடலமாக மீட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட இளையனார் வேலூர் முருகேசன் மகன் மகேஸ்வரன்(38) அரிசி வாங்கிக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு செல்ல நெய்யாடுபாக்கம் பகுதியில் செய்யாறை கடக்க முயன்ற போது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாகறல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.











No comments

Thank you for your comments