வேலூர் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் நீர்நிலைகள், ஓடைகள்! | Vellore Flood Threat: Encroachment on Waterbodies and Drainage Neglect Raises Concern
வேலூர் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் நீர்நிலைகள், ஓடைகள்!
மாநகராட்சி -மாவட்ட நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?
கிரீன் சர்கிள் அருகே உள்ள ஒரு முக்கிய கால்வாய் தற்போது முற்றிலும் மறைந்துவிட்டது. அந்த ஓடையின் மீது பல கட்டிடங்கள் எழுந்துள்ளன. நகரத்தின் பழைய வரைபடங்கள் மற்றும் புல எண்களை (Survey Numbers) ஆராய்ந்தால், ஒருகாலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடிய பாதைகள் தற்போது தனியார் கட்டிடங்களாக மாறியிருப்பது வெளிச்சமாய்ப் புரியும்.
வேலூர் மாநகரில் சிறிய அளவில் மழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நகரின் வடிகால் அமைப்புகள் பழுதடைந்ததற்கும், ஆக்கிரமிப்பால் இயற்கை நீர் ஓடைகள் மறைந்ததற்கும் நேரடி விளைவாகும்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில்,
“மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் இதைப் பற்றி தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் ஆதரவு மற்றும் அதிகார பலம் கொண்டவர்கள் நீர் நிலைகள் மீது கட்டிடங்கள் எழுப்பியிருக்கின்றனர். பொதுமக்கள் புகார் அளித்தாலும் அது செவிசாய்க்கப்படுவதில்லை” என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
“நீர் ஓடைகள் மீது கட்டிடங்கள் எழுந்தது ஒரே நாளில் இல்லை. பல ஆண்டுகளாக அரசியல் வாதிகள், அதிகாரிகள், பணக்காரர்கள் ஒருங்கிணைந்து இதை செய்துள்ளனர். புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து பாரபட்சம் காட்டுகிறார்கள்” என்று குற்றம்சாட்டினர்.
வேலூர் மாநகராட்சியில் கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 70% ஓடைகள் குறுகியோ மறைந்தோ விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வேலூர், காந்தி நகர், கிரீன் சர்கிள், CMC அருகே உள்ள பகுதிகளில் நிலை மிக மோசமாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
“ஆக்கிரமிப்பு புகார்களுக்கு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நிலை உறுதிசெய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
ஆனால், நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது. ஒவ்வொரு மழைக்கும் நகரம் நீரில் மூழ்கும் போது தான் நிர்வாகம் விழித்தெழுகிறது என்ற மக்கள் குற்றச்சாட்டு வலுத்துக் கொண்டே செல்கிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்பில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்?
எனினும், எந்தத் துறையும் தெளிவான நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் “நீர்நிலைகளை காக்கும் பொறுப்பு யாருக்கேனும் இருந்தால், இப்போது தான் செயல்பட வேண்டிய நேரம்” என வலியுறுத்துகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை:
வேலூரில் நீர்நிலைகள் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போனதால், சிறு மழையில்கூட சாலைகள் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால், சென்னை நகரம் போல் வேலூரும் மழைக்காலத்தில் பெரும் வெள்ளத்தில் சிக்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்காக சட்டத்தை வளைத்தல் நிறுத்தப்பட வேண்டும். பணக்காரரா அல்லது சாதாரண குடிமக்களா என்பதைக் கவனிக்காமல், சட்டப்படி அனைவரிடமும் சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வெள்ளம், மழைநீர் தேக்கம், நோய் பரவல் போன்ற பிரச்சனைகள் தீவிரமாகி, வேலூர் நகரம் வாழ முடியாத நகரமாக மாறும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் மறைந்த நீர்நிலைகளும் — காலம் கடந்தாலும் உண்மை மறையாது. காலச்சக்கரம் சுழற்சியில் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும். அந்த நாளில், நிர்வாகத்தின் மௌனம் தான் பெரிய கேள்வியாக மாறும்..!
இது தொடக்கம் தான்... நமது நிருப்ர் டைரியில் தொடரும்…
Vellore city faces a rising flood threat as waterbodies and drainage channels vanish under illegal encroachments. Officials remain silent while citizens fear Chennai-like flooding. Environmentalists urge immediate action.
No comments
Thank you for your comments