Breaking News

ஊராட்சித் தலைவர்களின் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை


காஞ்சிபுரம், அக்.6:

ஊராட்சி தலைவர்களின் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாலாஜாபாத் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 327 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு பரிந்துரை செய்தார்.

இக்கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் மா.த.அஜய்குமார் தலைமையில் அக்கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் 274 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கடந்த ஓராண்டாக நடைபெறவே இல்லை.

இதனால் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறாமலேயே காலதாமதம் ஆகி வருகிறது. 

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் பயன்பெறும் வகையில் தனியாக ஒரு குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

No comments

Thank you for your comments