வரப்போவது அரசியல் தேர்தல் அல்ல.. சமுதாயத் தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
செங்கல்பட்டு, அக்.4:
செங்கல்பட்டு மறைமலை நகர் நகராட்சி திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திராவிட கழக மாநிலத் துணைத் தலைவர் கவிஞர்.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூற்றாண்டு விழா கல்வெட்டினையும், விழா மலரையும் வெளியிட்டார்.
பின்னர் அவர் ஆற்றிய எழுச்சியுரையில் பேசியதாவது..
சுயமரியாதை இயக்க தொடர்ச்சி தான் திராவிடக் கழகத்தின் நீட்சி. தமிழர்களின் உரிமைகள், சுயமரியாதை, பகுத்தறி, சமூக நீதி சிந்தனை ஆகியனவற்றை நாம் பாதுகாக சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் வேர் விட்டதும் தான் காரணம். திராவிடர் கழகத்தின் கறுப்புச் சட்டைக்காரர்கள் தான் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.
திராவிடர் கழகத்தின் உழைப்பு விலைமதிப்பில்லாதது,பலன் எதிர்பாராதது,எனவே தான் கருத்தியல் உறுதியோடு வாழக்கூடிய கருப்புச்சட்டை வீரர்களுக்கு எனது சல்யூட். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டாலும் இன்று அவரது புகழ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.அங்கு பெரியாரின் படத்தை திறந்து வைத்து பூரிப்படைந்தேன். இதற்கு காரணம் ஆசிரியர் வீரமணி பெரியார் உலகமயமாக வேண்டும் என உழைத்ததே காரணம்.
திருச்சி சிரகனூரில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு திமுக சார்பில் நான் எனது ஒரு மாத சம்பளத்தை தர முடிவு செய்து அதை திமுக கழக நிர்வாகிகள் துரைமுருகன், டிஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரிடம் தெரிவித்தேன்.
அவர்களோ நாம் இன்று வளர்ந்து நிற்க காரணம் பெரியார் தான்.நீங்கள் அறிவித்து விடுங்கள் என்று சொன்னார்கள். அவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் எனது ஒரு மாத சம்பளத்துடன் திமுகவின் எம்பிக்கள் 31 பேர் மற்றும் எம்எல்ஏக்கள் 126 பேர் ஆகியோரின் ஒரு மாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடியை வழங்க இருக்கிறோம். இதை மகிழ்ச்சியோடும்,நன்றி உணர்வோடும் கொடுப்பதில் பெருமைப்படுகிறோம்.
அண்ணா சுயமரியாதை திருமண சட்டத்தையும்,கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட அங்கீகாரத்தையும் வழங்கினர்.
அதன் நீட்சியாகவே மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் அரசில் அனைத்து சாதியினரும் அர்ச்கராகும் திட்டத்தை செயல்படுத்தி, பாலினத்தையும் உடைத்து, பெண்களையும் அர்ச்சகராக ஆக்கி இருக்கிறோம்.பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த நாட்களை அரசு விழாவாக அறிவித்தது, ஆதிக்கத்தின் அடையாளமாக இருந்த காலணி என்ற சொல்லை அகற்றியது,சாதிப்பெயரில் இருந்த விடுதிகளை சமூக நீதி விடுதிகளாக மாற்றியது இவற்றையெல்லாம் செய்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது.
ஒடுக்கப்பட்ட குழந்தைகள் படிப்பது,இட ஒதுக்கீடு,சமத்துவம்,அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவது ஆகியனவற்றை பிடிக்காத கூட்டம் தான் திமுகவி பிடிக்கவில்லை என்று சொல்கிறது.
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையும் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்ல சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்துவது தான் திராவிட மாடல்.அதனால் தான் அண்ணாவும், கலைஞரும் சொல்லாததை ஸ்டாலின் செய்கிறான் என்று பலரும் கொதிக்கிறார்கள். எரியட்டும் என்று தான் திரும்ப,திரும்ப திராவிட மாடல் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வரப்போவது அரசியல் தேர்தல் அல்ல, தமிழினம் தன்ணைக் காத்துக் கொள்ளக்கூடிய சமுதாயத் தேர்தல். அதிமுகவினரால் 10 ஆண்டு காலம் பாழாய்ப்போன தமிழகத்தை மீட்டெடுத்து, கடந்த 4 ஆண்டுகளில் பலப்படுத்தி, வரலாறு காணாத வளர்ச்சிப் பாதையை அழைத்து வந்திருக்கிறோம். எப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்றும் பேசினார்.
முன்னதாக நூற்றாண்டு விழாக் கல்வெட்டினை திறந்து வைத்தார்.பின்னர் விழா மலரை அவர் வெளியிட அதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக் கொண்டார்.
மாநாட்டில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், எம்பி க.செல்வம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக திராவிடர் கழக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் செம்பியன் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments