காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு - டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செப்.1:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளர்கள் மதுபாட்டில் வாங்கும் போதே ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும்.
காலிமதுபாட்டில்களை சாலைகளிலும், பொது இடங்களிலும் வீசி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் இத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
ஆனால் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க நிர்வாகிகள் வரதன், சந்திரபாபு, கார்த்திகேயன், உதயசங்கர், மாநிலத் தலைவர் சிவா, துணைத் தலைவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அரசு மதுக்கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை, கடையின் நிர்வாகச் செலவினங்களை பணியாளர்கள் மீது திணித்தல், பணிச்சுமையை அதிகப்படுத்துதல், பணியாளர்களுக்கு 12 மணி நேரப்பணி ஆகியனவற்றைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
காலிமதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் இத்திட்டத்தை கைவிடாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments
Thank you for your comments